
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. திருப்பதி நகரின் சுற்றுப் பகுதிகள் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அண்மையில் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமானவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளால் திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ஆகியவற்றிக்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்று உளவுத் தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து திருப்பதி, காணிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை உளவுத்துறை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருப்பதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகப் படுத்தப் பட்டுள்ளது.



