
பெங்களூரு: ‘சந்திரயான் – 2’ விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனம் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் வருத்தத்துடன் வெளியிட்டார். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரிதும் சோகம் அடைந்தனர்.
சந்திரயான் – 2 விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காண கர்நாடக மாநிலம் பெங்களூரு பீன்யாவிலுள்ள இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இதனை நேரடியாகக் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூருக்கு வந்திருந்தார்.
மேலும் இந்த நிகழ்வைக் காண்பதற்கான எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ – மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களும் பெங்களூரு மையத்துக்கு வந்திருந்தனர்.
நள்ளிரவு நேரம் என்ற நிலையில் அதையும் கடந்து, பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். லேண்டர் சாதனம் நிலவில் தரையிறக்குவது மிகவும் சவாலான பணி என்பதால், பிரதமர், விஞ்ஞானிகள் என அனைவரும் சற்று பதற்ற மனநிலையிலேயே இருந்தனர்.

இன்று அதிகாலை 2.15 மணி அளவில் ‘லேண்டர்’ சாதனம் விக்ரம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டது.
திட்டத்தின் படி தரை இறங்க வேண்டிய லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்கும் முன் 2.1 கி.மீ., தொலைவில் தனது சிக்னலை இழந்தது.

இதனை வருத்தத்துடன் அறிவித்தார் இஸ்ரோ தலைவர் சிவன். இதைக் கேட்டு பிரதமர் மோடி, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என்று கூறி, விஞ்ஞானிகளுக்கு தைரியம் அளித்தார் பிரதமர் மோடி.
அப்போது அவர், இஸ்ரோ விஞ்ஞானிகளை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது. வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். நம்பிக்கையுடன் இருங்கள்; நாம் சாதித்தது சாதாரண விஷயமில்லை. முன்னேறிச் செல்லுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள். நம்பிக்கையுடனும், கடின உழைப்புடனும் நமது விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று கூறிவிட்டு, பின்னர் இஸ்ரோவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் இது குறித்து கூறிய போது, நிலவின் பரப்பிலிருந்து 2.1 கிமீ., வரை விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தது போல் பயணித்தது! அதன்பின் விக்ரம் ‘லேண்டர்’ உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதற்கான காரணங்களை ஆராயவுள்ளோம். .. என்று கூறினார்.
விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்ட போது, சந்திரயான்- 2 திட்டத்தின் மூலம் இஸ்ரோ தனது தைரியத்தையும், முன்மாதிரியான அர்ப்பணிப்பையும் காட்டியுள்ளது.. இஸ்ரோ குறித்து நாடே பெருமிதம் கொள்கிறது… என்று கூறினார்.
சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் தனது டிவிட்டர் பதிவில், சந்திராயன்-2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது என்று கூறினார்.
சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலில், சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல. லேண்டர் உடனான தொடர்பு மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது. லேண்டர் சிக்னலை இழந்தாலும், ஆர்பிட்டர் இப்போதும் இஸ்ரோ உடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்ந்து நிலவின் தென் துருவத்துக்கு மேலாகச் சுற்றி வந்து கொண்டிருக்கும். நாம் எதிர்பார்த்தபடி, தொடர்ந்து நிலவின் மேல் பரப்பை ஆராயும் என கூறியுள்ளது.



