மோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா! கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை!

Published:

modi mamta1 - 2026

தில்லி வந்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது என அதிகாரிகள் கூறினர்.

அண்மைக் காலமாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியில் ஆளும் பாஜக. என கடுமையாக சகட்டுமேனிக்கு விமர்சித்து வந்தார் மம்தா பானர்ஜி. சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு மேற்கு வங்கத்தில் கடும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடியை அவர் இன்று சந்தித்த போது, மோடிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், வழக்கம் போல், குர்தா மற்றும் இனிப்புக்களை பரிசாக வழங்கினார்.

ஒவ்வோர் ஆண்டும் நவராத்தி, தீபாவளி, மற்றும் மோடியின் பிறந்தநாள் ஆகிய முக்கிய நாட்களின் போது பிரதமர் மோடிக்கு குர்தா மற்றும் பெங்காலி இனிப்பு வகைகளை மம்தா வழங்குவது வழக்கம்தான். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, சகோதரி மம்தா தனக்கு குர்தா, ரசகுல்லாக்களை வருடந்தோறும் அனுப்பி வருகிறார் என்று உண்மையைப் போட்டுடைத்தார். ஆனால் அது தேர்தல் நேரம் என்பதால், மோடிக்கு எதிரான தீவிர அரசியலைச் செய்து வந்த மம்தா, இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

modi mamta - 2026

வாக்கு வங்கியை மனதில் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் போது, மோடி இவ்வாறு கூறியதால், கோபத்தில் இனி மேற்கு வங்கத்தின் சகதியில் ஊறிய கூழாங்கற்களை அனுப்பி வைப்பேன் என்று கூறினார் மம்தா. ஆனால் அதனை விரும்பி ஏற்பதாகக் கூறிய மோடி, அது ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாக்குர் என மகான்கள் வாழ்ந்த பூமியின் பிரசாதமாக ஏற்று உண்பேன் என்றார். இது வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

பின்னர் வந்த தேர்தலில் பாஜக., எதிர்பாராத அளவுக்கு உறுப்பினர்களைப் பெற்று வெற்றி பெற்றது. இது மம்தா பானர்ஜிக்கு கடுக்காய் கொடுத்தது போல் ஆனது.

இந்நிலையில், இன்று மோடியை சந்தித்து நலம் விசாரித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி குறித்து கோரிக்கை விடுத்தாராம்.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மம்தா சந்திக்கிறார். இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப் படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் பெயரை பங்க்ளா என மாற்றுமாறு சட்ட மன்றத்தில் தீர்மானம் போடப் பட்டது. ஆனால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. எனவே, மாநிலத்தின் பெயர் மாற்றம், பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டது இவை குறித்து பேசுவதற்காகவே மம்தா பானர்ஜி பிரதமரை சந்திக்கிறார் என்று கூறப் பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தை உலுக்கிய சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரைக் காப்பாற்ற, மம்தா சில முயற்சிகளை எடுப்பதற்காகவே தில்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img