
நியூயார்க் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்தித்துப் பேசினர். அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோடியின் இந்த சுற்றுப் பயணத்தில் இரண்டாவது சந்திப்பு இது.
ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் மோடி. அப்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர் என்றார் பிரதமர் மோடி.
மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது; இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் தொடங்க உள்ளன என்று கூறினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அப்போது, இந்தியாவின் தந்தை மோடி என்று குறிப்பிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். பயங்கரவாதத்தை வேரறுக்கும் விஷயத்தில் இந்திய பிரதமர் மோடி தன் கருத்தை மிக வலுவாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறார். பாகிஸ்தானின் பயங்கரவாதப் போக்கைக் கையாளும் திறன் அவருக்கு மிக வலுவாக உள்ளதாக உறுதியாக நம்புகிறேன்.
மக்கள் அனைவரும் அவர் மீது மிக அதிக ஈர்ப்பு கொண்டுள்ளதை ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கண்டேன். அமெரிக்க ராக்ஸ்டார் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரிஸ்லி போல இந்தியாவின் ராக்ஸ்டார் ஆகத் திகழ்கிறார் மோடி.
எனக்கும் மோடிக்குமான கருத்து ஒற்றுமை மிகச் சிறந்ததாக உள்ளது. அவர் மீது உண்மையிலேயே அதிக மதிப்பும் ஈர்ப்பும் எனக்கு உள்ளது. மிகவும் கௌரவமானவராக மிகச் சிறந்த தலைவராக உள்ளார். இதற்கு முந்தைய இந்தியாவை நான் அறிவேன். அது கிழிந்துபட்ட நாடாகக் கிடந்தது. துண்டு துண்டாக, சண்டைகள் நிறைந்ததாக இருந்தது. அதையெல்லாம் சீர்செய்து ஒருங்கிணைந்த நாடாக இந்தியாவை மோடி மாற்றியுள்ளார்.
ஒரு தந்தையைப் போல நாட்டைச் சீர்செய்துள்ளார். அவர் இந்தியாவின் தந்தை. நாம் அவரை இந்தியாவின் தந்தை என்றே அழைக்கலாம். நாட்டிற்கு மிகச் சிறந்த பணியாற்றி இருக்கிறார் என்றார் டிரம்ப்.
மேலும், இருநாடுகளுக்கும் இடையில் இருந்த பல பிரச்னைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஐ.நா பொதுச் சபையில் 74-வது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் தொடங்கியுள்ள நிலையில் அதில் உரை நிகழ்த்துவதற்காகவும் மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஹூஸ்டர் நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ என்ற நிகழ்வில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மோடியுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரே மேடையில் பங்கேற்று பேசினார்கள்.
“வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் மிக சிறப்பாக செயலாற்றி வருகிறோம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இது தொடர்பாக வர்த்தக துறை ஆலோசகர் ராபர்ட் லைத்திஸர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்”என்று தெரிவித்தார். இருப்பினும் இரு தரப்பினரும் எந்தவித காலக்கெடுவும் வழங்கவில்லை.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி கூறியபோது… “வர்த்தகத்தைப் பொறுத்தவரை ஹூஸ்டனில் இந்திய நிறுவனமான பெட்ரோனெட் 2.5பில்லியன் டாலருக்கு கையெழுத்திட்ட ஒப்பந்தம் இருந்தது. இது 60 பில்லியன் டாலர் வர்த்தகம் மற்றும் 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது இந்தியா எடுத்த மிகப்பெரிய முயற்சி என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.