
ஏடிஎம்-மில் பணம் எடுக்கப் போறீங்களா? இதோ புதிய விதிமுறைகள்
நாம் நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் முன்பெல்லாம் அதை எடுப்பதற்கு வங்கிகளில் கவுண்டர்களில் வரிசையில் நின்று வெகு நேரம் செலவழிப்போம் இப்போது அதையெல்லாம் மறந்து ஆயிற்று நாம் பணம் எடுக்க அதிகம் இப்போது நாடுவது ஏடிஎம் களைத்தான்!
ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் பணம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துள்ளன. அதே நேரம் பணம் அல்லாது பிற பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.
பெரும்பாலான மக்கள் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
சிலநேரம் பணம் எடுக்கும்போது ஏ.டி.எம்.இல் பணம் வந்திருக்காது. ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு நம் கணக்கில் இருந்து கழிக்க பட்டிருக்கும் இந்தப் பணம் மீண்டும் கணக்கில் சேர்க்க சில தினங்கள் ஆகும். இவை உரிய தினத்தில் வரவு வைக்கப்படுவதில்லை!
இதை அடுத்து ரிசர்வ் வங்கி சென்ற வாரம், ‘வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைப்பதில் சில வங்கிகள் காலதாமதம் செய்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் உரிய கணக்குகளில் வரவு வைக்கப்படாத பட்சத்தில் வங்கிகள் அந்த நபருக்கு அபராதம் செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புதிய விதிகளின்படி ஏடிஎம்.,இல் பணம் வராமல், கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட பணம் மீண்டும் 5 தினங்களில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் பணம் திரும்பி கணக்கில் வைக்கப்படும் வரை நாள் ஒன்றிற்கு 100 ரூபாய் அந்தப் பயனருக்கு வங்கி அபராதம் செலுத்த வேண்டும். பணம் எடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 5 நாட்கள் மட்டுமே அவகாசம்.
சென்ற மாதம் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளை இலவச பரிவர்த்தனைகள் கணக்கில் சேர்க்கக்கூடாது.
ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவே இலவச பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இதனால் ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை இந்தக் கணக்கில் சேர்க்காமல், வாடிக்கையாளருக்கு அந்த இலவச பரிவர்த்தனையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அதேபோல் ஏ.டி.எம்.இல் பணம் இல்லாதபோதோ, தவறான பின் கொடுக்கப்பட்டோ, ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளையும் இலவச பரிவர்த்தனைகள் கணக்கில் சேர்க்கக் கூடாது.
இந்த புதிய விதிகளின்படி இனி பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள். பணம் அல்லாத பிற பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை, என அறிவிக்கப்பட்டுள்ளது.



