
காட்டில் தனியாக 14 நாட்கள்: சித்தூர் மலைச்சாலையில் இம்மாதம் 15ஆம் தேதி விபத்துக்குள்ளான டெம்போ டிராவலர் வண்டியின் டிரைவர் ‘ராமக்ககாரி’ பாலகிருஷ்ணா (30) காணாமல் போனார். அவரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியில் 14 நாட்களாக காட்டில் தனியாக ஒளிந்திருந்த அவரை கண்டுபிடித்தார்கள். 14 நாட்களாக உணவின்றி பலவீனமாக கிடந்த அவரை திங்களன்று ‘மாரேடுமில்லி’ போலீசார் கைது செய்தனர் . தற்போது அவருக்கு மாரேடுமில்லி முதன்மை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்திலிருந்தும் அனந்தபுரம் மாவட்டம் ‘மடகசிர’ என்ற ஊரில் இருந்தும் பக்தர்கள் சிலர் டெம்போ டிராவலர் வாகனத்தை ஏற்பாடு செய்துகொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டனர்.
பத்ராசலத்தில் சீதாராமரை தரிசித்துக்கொண்டு அன்னவரம் சத்யநாராயண சுவாமி தரிசனத்திற்காக சென்று கொண்டிருந்தபோது மாரேடுமில்லி – சித்தூர் மலைச் சாலையில் டெம்போ கவிழ்ந்தது .
விபத்து நடந்த போது வாகனத்தில் 13 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர். மீதி பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். மடகசிர கிராமத்தைச் சேர்ந்த டெம்போ டிரைவர் பாலகிருஷ்ணா தலைமறைவானார்.
சாலை விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர் பாலகிருஷ்ணா அச்சத்தால் அண்மையில் இருந்த காட்டுப் பகுதிக்கு ஓடிவிட்டார். அப்போது முதல் காட்டிலேயே வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அங்கு கிடைத்த ஊற்று நீரை அருந்தியும் காலம் கழித்து வந்தார்.
அருகிலிருந்த கிராமத்து மலைவாசிகள் காட்டிற்குச் சென்றபோது பாலகிருஷ்ணாவைப் பார்த்து வியந்தனர். விசாரித்து விஷயம் அறிந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவின்றி பலவீனமாக நடக்க முடியாமல் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதன் மூலம் விபத்து நடந்த டெம்போ வேன் டிரைவர் என்ன ஆனார் என்ற சந்தேகம் நிவர்த்தி ஆனது. மாயமாகி போன டிரைவர் கிடைத்தார்.



