
அக்டோபர் 31ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு ஹைதராபாத் ஜூபிளி பஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு ஆட்டோ டிரைவர் தன் ஆட்டோவை நிறுத்தினார். அருகில் இருந்த காலி மைதானத்தில் இருவர் சந்தேகத்துக்கு இடமாக குழி தோண்டுவதை கவனித்து அருகில் சென்று பார்த்தார்.
ஒருவர் கையில் ஒரு துணி மூட்டை இருந்தது. அருகில் இன்னொருவர் கைகளாலேயே குழி பறித்து மண்ணைத் தோண்டி கொண்டிருந்தார்.
சந்தேகப்பட்டு உடனே ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து விசாரித்தனர். தன் பேத்தியான பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் என்றார் ஒருவர். அதனை புதைத்துவிட்டு தம் ஊரான கரீம்நகருக்கு செல்லப் போவதாகக் கூறினார்.

பஸ்ஸில் குழந்தை சவத்தை ஏற்க மாட்டார்கள் என்பதால் இங்கேயே புதைக்க போவதாகவும் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த காலி இடத்தில் குழி தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.
போலீஸ் கன்ஸ்டபிலஸ் எஸ். வெங்கடராமகிருஷ்ணா துணி மூட்டையை அவிழ்த்து பார்க்கையில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரோடு அசைந்து கொண்டிருந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்து குழந்தையை காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர் போலீசார்.