
ஐந்து மகன்களை சிறப்பாக வளர்த்து ஆளாக்க அந்த தாய் செய்யாத கூலி வேலை இல்லை. படாத கஷ்டங்கள் இல்லை. அவர் சிரமங்கள் வீண்போகவில்லை. ஐவரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளார்கள்.
அந்த தாயின் முயற்சியை பிரதமர் மோடி அடையாளம் கண்டு அண்மையில் நிகழ்ந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசினார். அந்த தாயே ‘கொடிபாக’ அருணா.
குழந்தைகளின் பசி தீர்ந்தால்தான் தன் வயிறு நிரம்பும் என்று நினைக்கும் தாய்மார்கள் பலர். அப்படிப் பட்டவர்களில் ஒருவர் அருணா. அவருக்கு 12 வயதிலேயே திருமணம் நடந்தது. கணவர் ‘கிலாவரங்கல் ‘ மண்டலம் ‘ரங்கசாயி’ பேட்டையைச் சேர்ந்த சாம்ராஜ்யம்.
கணவர் ஆர்டிசியில் கண்டக்டர். குடும்பத்துக்கு எந்த குறையுமின்றி கண்போல் காத்து வந்தார். ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தனர். எல்லாம் நன்றாக இருந்த போது வாழ்க்கையில் பெரிய இடி விழுந்தது.
கணவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டது. மருத்துவமனைகளை சுற்றி அலைந்தனர். கடைசியில் கணவரின் தாயாரே சிறுநீரக தானம் செய்தார். ஆபரேஷன் நடந்தது.
மீண்டும் குடும்பம் எழுந்து நடக்க ஆரம்பித்தது என்று மூச்சு விடுகையில் கணவர் மரணம் அடைந்தார். அவரை பிழைக்கச் செய்ய வாங்கிய கடன் சுமை தலைக்கு மேல் இருந்தது. பிரச்சினைகள் குடும்பத்தை சூழ்ந்தன.
அதுவரை எந்த கவலையுமின்றி குழந்தைகளை வளர்த்து வந்த அருணா மீது பொருளாதார பாரம் வந்து விழுந்தது. இல்லத்தரசியாக வீட்டு நிர்வாகம் மட்டுமே அறிந்த அருணா வெளியில் சென்று வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சொந்தமாக வீடு தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் வயல்களில் களை பிடுங்கச் சென்றார். நாற்று நட கற்றுக் கொண்டார். தான் உடலை வருத்தி ஓய்வின்றி உழைத்தால்தான் தன் மகன்கள் படித்து முன்னேற முடியும் என்பதில் உறுதியாக இருந்தார்.
யார் எந்த வேலை கொடுத்தாலும் செய்தார். சாக்லேட் பேப்பர் சுற்றுவது, சாப்பாட்டு இலை தைப்பது, பீடி சுற்றுவது.. என்று ஒன்றல்ல…!
மகன்களை தனியார் பள்ளிகளில் சேர்த்து நன்றாகப் படிக்கச் சொல்லி வற்புறுத்தினார். பீஸ் கட்ட முடியாத போது கடன் வாங்கினார்.
“ஏன் இப்படி ஓயாது ஓடி உழைக்கிறாய்? உன் பிள்ளை களையும் வயல் வேலைக்கு அழைத்துச் செல்லக்கூடாதா? உதவியாக இருக்குமே..” என்று அக்கம்பக்கத்தார் அறிவுரை கூறினர்.
“நான் கொஞ்ச நாள் கஷ்டப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வசதியாக வாழ்வார்கள். அவர்கள் படிப்பை நிறுத்தி கூலி வேலைக்கு வந்தால் அவர்களின் எதிர்காலமே இருண்டு விடும்” என்று பதிலளித்தார்.
பிள்ளைகளுக்கு சோறு போட்டு அவர் தண்ணீர் குடித்து வயிறு நிறைத்த நாட்கள் பல. தற்போது அவர் பிள்ளைகள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். பெரிய மகன் ஆர்டிசியில் மெக்கானிக். இரண்டாவது மகன் அரசாங்க பள்ளி ஆசிரியர். மூன்றாம் மகன் சிஆர்பிஐ எஸ்ஐ, நான்காம் மகன் சிஏ, ஐந்தாம் மகன் சாஃப்ட்வேர் என்ஜினியர்.
பிரதமர் மோடி அவர்கள் மகிளா சக்தியைப் பற்றி எடுத்துரைத்து மகளிரின் வெற்றிக் கதைகளை பகிரும்படி கேட்டிருந்தார். அருணாவின் இரண்டாவது மகன் தன் தாயின் சிறப்புகளை விவரித்து நமோ ஆப்பிற்கு அனுப்பி வைத்தார்.
அக்டோபர் 27ல் ஒலிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி அருணாவின் சிறப்பை பிரதமர் பாராட்டிப் பேசினார். அயராது உழைத்து ஐந்து மகன்களையும் வாழ்க்கையில் நிலைபெறுமாறு செய்த ஆதர்ச பெண்மணியாக அருணாவை மனம் திறந்து பாராட்டினார். அந்தக் குடும்பம் பற்றி எடுத்துரைத்து அருணாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
“அன்றைக்கு நான் கஷ்டப்படாமல் இருந்திருந்தால் இன்று என் பிள்ளைகள் இப்படி இருக்க முடியாது. ஊரில் எல்லோரும் எங்களை உயர்வாக மதிக்கும் போது பெருமையாக உள்ளது. வயிறு நிறைந்தது போல் உள்ளது. இப்போது என் மகன்கள் என்னை மகாராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்” என்று கூறி மகிழ்கிறார் அருணா.
அவருக்கு நாமும் நம் பாராட்டுக்களை தெரிவிப்போம்.