
முன்னா மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நன்றாக இருக்கிறார் என்று அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், ப.சிதம்பரத்துக்கு திகார் சிறை அறையில் வசதிகள் சிலவற்றைச் செய்து கொடுக்க வேண்டும் என்று மட்டும் அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தற்போது மீண்டும் மறுத்துள்ளது.
சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதால் ஐதராபாத் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இதனால், கபில் சிபல் சொல்வது போல் சிதம்பரத்தின் உடல் நிலை மோசமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி, தில்லி நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவர் குழுவுக்கு அக்.31 நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழு, இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிதம்பரத்தின் உல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையில்லை. சிறை அறையை சுத்தம் செய்து, கொசுவலை அளித்தால் போதும்! என்று தெரிவித்திருந்தது.
இதை அடுத்து, ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்திற்கு கொசுவலை, முக கவசம் அளிக்க வேண்டும் என்றும், சில வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவக் குழு வாரம் ஒருமுறை சிதம்பரத்தை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம். மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, புற நோயாளியாக சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.



