
ஜியோ மொபைல் போன் இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரத்தை 20 விநாடியாகக் குறைத்ததை டிராய் தலையிட்டு கண்டித்ததுடன் நேரம் குறித்து நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரங்கள் செல்ஃபோனில் 30 விநாடிக்களாகவும், லேண்ட்லைன் தொலைபேசிகளில் ஒரு நிமிடமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு இன்கமிங் அழைப்பைத் தவிர்ப்பதன் மூலம் தனது நெட்வொர்க்கில் அவுட்கோயிங் அழைப்பை அதிகரித்ததாக ஜியோ மீது மற்ற நிறுவங்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து ட்ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியாவின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இன்கமிங் அழைப்புக்கு 45 விநாடிகளை வைத்திருக்கும் நிலையில், ஜியோ மட்டும் 20 விநாடிகளாகக் குறைத்தது.
ஜியோவின் இந்த கோல்மால்தனம் வாடிக்கையாளர் களிடையே மட்டுமின்றி, தொழில் போட்டியில் ஈடுபட்டுள்ள மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் கடும் அதிர்ச்சியை தந்தது.
ஜியோவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜியோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயிடம் புகார் சென்றது. இதன் அடிப்படையில் ஜியோவின் வழியில் மற்ற சில நிறுவனங்களும் இன்கமிங் அழைப்புக்கான நேரத்தை 25 நொடிகளாகக் குறைக்கவுள்ளதாக முடிவெடுத்தது.
இறுதியில் நீண்ட ஆலோசனைக்குபின், மொபைல் இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரம் 30 விநாடிகளாகவும், லேண்ட்லைனில் 1 நிமிடமாகவும் நிர்ணயம் செய்வதாக ட்ராய் அறிவித்துள்ளது.
பொதுவாக, இன்கமிங் அழைப்பு வந்ததும் உடனடியாக எடுத்துப் பேசுவோர் குறைவு. சற்று நேரம் ரிங் ஆன பிறகே மெதுவாக எடுத்துப் பேசுவது வழக்கமாக இருக்கிறது. மேலும், ஜியோ திடீரென மற்ற நெட்வொர்க் அவுட் கோயிங் கால்ஸுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளதாக அறிவித்த நேரத்தில், இவ்வாறு இன்கமிங் கால்ஸ்க்கான ரிங்கிங் நேரத்தை 20 நொடியாகக் குறைப்பது உள்நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.



