
விஜயவாடா கோசாலையில் 86 பசுக்கள் இறந்தது எப்படி என்று, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறிய காரணத்தைக் கேட்டு விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜயவாடா கோசாலையில் பசு மாடுகள் சந்தேகத்துக்கு இடமாக மரணித்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, ஒரேயடியாக 86 பசு மாடுகள் இறந்து கிடந்ததால் என்னதான் நடந்திருக்கும் என்று தெரியாத புதிராகவே இருந்தது.
எனவே, இது குறித்து விசாரித்து அறிய, அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், புலனாய்வுக் குழு அதிகாரிகள் பசுக்களின் இறப்புக்கு காரணம் கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கையில், பசுவுக்கு போடும் புல்லில் நைட்ரேட் சதவிகிதம் அதிகமாக இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புல்லில் இருக்க வேண்டிய நைட்ரேட் 1.6 சதவீதத்திற்கு பதிலாக, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக இருந்ததால், புல்லே விஷமாக மாறியதாக அதிகாரிகள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இறந்த பசுக்கள் தின்ற பச்சைப் புல்லில் 3.79 கிராமிலிருந்து 4.47 கிராம் வரை நைட்ரேட் இருந்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிக அளவு நைட்ரேட் ஹீமோகுளோபினுக்குள் சென்று சேர்ந்த மெதிமோகுளோபினாக மாறி பிராண வாயுவை எடுத்துக் கொள்ளும் சக்தியை இழக்கச் செய்கிறது. அதன் காரணமாக பசுக்கள் இறந்தன என்று பரிசோதனையில் தெரியவந்தது.
பரிசோதனைகளுக்காக எஃப்என்எல் லேப், வெடர்னரி லேப், பரிசோதனை லேப் ஆகியவை செய்த ஆராய்ச்சிகளின் பின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்தனராம்.



