
அயோத்தி விவகாரத்தில், அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாகவும், இதனை வெற்றி தோல்வியாக பார்க்கக் கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவே பார்க்கக்கூடாது.
ராம் பக்தியோ, ரஹீம் பக்தியோ, தற்போதைய சூழலில் ராஷ்ட்ர பக்தியை (தேச பக்தியை) வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அமைதியும் நல்லிணக்கமும் நிலவட்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கும் நீதித்துறை மூலம் ஏற்கத்தக்க வகையில் தீர்வு காண முடியும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. நமது நீதி அமைப்பின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை ஆகியவை வெளிப்பட்டுள்ளன.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபண மாகியுள்ளது. நீதி பரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.
அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன். – என்று அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.