
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு வழங்கப்படுவதாக, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கு தங்கள் கட்சி ஆதரவாக இருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அனைத்து கட்சிகளையும் சமூகங்களையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறும், காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவரும் செயற்குழு உறுப்பினருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது” என்றார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய தேசிய காங்கிரஸ் மதிக்கிறது. நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற விழுமியங்கள் மற்றும் சகோதரத்துவத்திற்கு, கட்டுப்பட்டு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பல யுகங்களாக நம் சமுதாயம் வரையறுத்துள்ள அனைவருக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமை என்ற நமது பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ” இவ்வாறு காங்கிரஸ் கூறியுள்ளது.