
இன்று குருநானக் பிறந்த நாள். சீக்கியர்களின் மதகுரு குருநானக் ஜயந்தி கார்த்திகை பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. சந்திரனை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப்படும் சாந்திரமான காலண்டர்படி இன்று கார்த்திகை பௌர்ணமி.
சாதாரணமாகவே சிறப்பான நாளாக கருதப்படும் கார்த்திகை பௌர்ணமி குருநானக் பிறந்த நாளும் கூட சேர்ந்து கொண்டதால் பஞ்சாபியர்களுக்கு உயர்ந்த பண்டிகையாக ஆகிறது.
குருநானக் ஜெயந்தியை பஞ்சாபியர்கள் “குருபூரப்” என்றழைப்பர். குருநானக் ஜெயந்தியை இந்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
1469ல் தற்போதைய பாகிஸ்தானில் லாகூர் அருகிலுள்ள ‘நஸ்கானா சாகிப்’ என்ற இடத்தில் குருநானக் பிறந்தார். அவர் பிறந்தது ஹிந்துக் குடும்பத்தில்!
நானக் ஹிந்து முஸ்லிம் மத நூல்களைப் படித்து அறிந்தார். இவ்விரண்டு மதங்களுக்கும் வேறான சீக்கிய மதத்தை ஸ்தாபித்து வழிபடும் குருவானார். மொத்தம் 10 சீக்கிய மத குருமார்களில் குருநானக் முதல் குரு.

லாகூரில் குருநானக் பிறந்த புனிதத் தலம் ‘குருத்வாரா ஜனம் ஆஸ்தான்’ என்று பெயர் பெற்றுள்ளது. குருநானக் ஏப்ரல் 15 இல் பிறந்ததாகக் கூறுபவர்களும் உள்ளனர். ஆனால் கார்த்திகை பௌர்ணமியை நானக் பிறந்த தினமாக ஏற்று கொண்டாடுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
பஞ்சாபியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் குருநானக்கை வணங்கி ‘குருபூரப்’ பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் ஒரே கடவுளை வழிபடுபவர்கள். ஓம்காரத்தை ஒரே தெய்வமாக பூஜை செய்பவர்கள்.
குருநானக் ஜெயந்தி தொடர்பாக குருத்வாராவில் சீக்கியர்கள் தங்கள் புனித கிரந்தமான ‘குரு கிரந்த சாகிப்’ நூலை 48 மணி நேரம் இடைவிடாமல் படிப்பார்கள். இவ்வாறு படிப்பதை ‘அகண்ட படனம்’ என்பர். இந்த குரு கிரந்த சாகிப் அகண்ட படனத்தை குருநானக் ஜெயந்திக்கு முதல் நாளே படித்து முடித்து விடுவார்கள்.
இனி ஜயந்தி நாளன்று விடிகாலையே ‘ப்ரபாத் ஃபேரிஸ்’ என்ற பெயரில் ஊர்வலம் நடக்கும். இது குருத்வாராவில் இருந்து தொடங்கி எல்லா வீதிகளுக்கும் செல்லும். ‘நிஷான் சாஹேப்’ என்ற சீக்கிய கொடிகளை ஏந்தி ஊர்வலம் செல்வர்.
குரு கிரந்த சாஹேப் நூலை பல்லக்கில் வைத்து பூக்களால் அலங்கரிப்பர். பக்தர்கள் ‘சிங் சாஹேப் ‘ மற்றும் பிற பக்தி கீதங்களை இசைத்தபடி நடப்பார்கள். வாத்தியங்களை அதற்கு ஏற்ப இசைப்பர். கதாகாலட்சேபம் முடிந்த பின் பக்தர்களுக்கு சிறப்பு விருந்து அளிப்பார்கள்.