ஏழைகளுக்கான உத்தம பட்ஜெட்: மோடி கருத்து

கறுப்புப் பணத்துக்கு எதிராக கடைசி வரை போராடுவேன் என்று உறுதிபடத் தெரிவித்த மோடி, இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட், கடந்த இரண்டரை ஆண்டுகளில் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம்

புது தில்லி:
அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், ஏழைகளுக்கான உத்தம பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

2017 – 18ஆம் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று முற்பகல் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமானவரி விகிதக் குறைப்பு நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், ஏழைகள், வேளாண்மை, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைப்பது விரைவில் சாத்தியமாகும் எனக் கூறினார்.

தேர்தல் நிதி திரட்டுவதில் ஊழலைத் தடுக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, சாலை கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்தும் பட்ஜெட். தனி நபர் வருமான வரி அளவு குறைக்கப்பட்டுள்ளது, நடுத்தர வர்க்கத்தினருக்கு நேரடி பலன் கிடைக்கும். நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பாராட்டு தெரிவித்தார்.

வேளாண்மை, மீன்வளம், தூய்மையான இந்தியா உள்ளிட்ட இலக்குகளை கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இது. இளைஞர்கள், பெண்கள், முதியோர் நலனுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதுஎன்று குறிப்பிட்ட மோடி, மொத்தத்தில் இது ஊழலை ஒழிக்கும் உத்தம பட்ஜெட் என்று கூறினார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராக கடைசி வரை போராடுவேன் என்று உறுதிபடத் தெரிவித்த மோடி, இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட், கடந்த இரண்டரை ஆண்டுகளில் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம் என்று கூறினார்.