
சபரிமலை கோவிலுக்கு வந்த கேரளத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், கோயில் பாரம்பரிய நடைமுறைகளில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துவதாக இந்து அமைப்புகள் கருத்து தெரிவித்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, உச்ச நீதிமன்றதின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன. இந்த மறு சீராய்வு மனுக்களின் மீதான தீர்ப்பு அண்மையில் வழங்கப் பட்டது. அதில், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் கூறியது. அதே நேரம், தாங்கள் முன்னர் கொடுத்த தீர்ப்பு நடைமுறையில் உள்ளது என்றும் கூறியது. எனவே அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற நிலை உருவாகியது.

இருப்பினும், கேரள அரசு, இந்த நடைமுறையை அமல்படுத்த தயக்கம் காட்டியது. இது குறித்து மாநில அரசு தலைமை வழக்கறிஞர் மாநில அரசுக்கு கொடுத்த பரிந்துரையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த வருடத்தைப் போல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டாம் என்றார்.
இருப்பினும், இந்த வருடமும் பெண்கள் பலர் சபரிமலை கோவிலுக்குச் செல்ல முன்பதிவு செய்தனர். அதே நேரம், மாநில தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், சபரிமலை சமூக ஆர்வலர்களுக்காக இடம் இல்லை. இது மத வழிபாட்டுத் தலம். எனவே சபரிமலைக்கு வருவதாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகி, தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு, நீதிமன்ற உத்தரவுடன் வந்தால் மட்டுமே போலீஸார் பாதுகாப்பு குறித்து யோசிப்பார்கள் என்று கூறினார்.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இன்று கோவிலுக்குச் செல்ல முயன்ற 12 வயதுச் சிறுமி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார். தந்தையுடன் வந்த சிறுமியை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சிறுமியின் தந்தை மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்தார்.

முன்னதாக, நேற்று ஒரு சிறுமி, அடுத்த வருடம் முதல் எனக்கு பத்து வயது தொடங்குவதால், நான் இனி 50 வயது கடந்துதான் சபரிமலைக்கு வருவேன் என்று எழுதப் பட்ட பதாகையை அணிந்து வந்திருந்தார். அவரது செயலை அனைவரும் பாராட்டினர்.