
ஒரு தலைக்காதலால், பஞ்சாப் மாநிலத்தில், ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்த இளைஞனை, கிராமத்து மக்கள் கட்டி வைத்து உரித்து, நிர்வாணமாக டூ வீலரில் அமரவைத்து ஓட ஓட விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குர்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸத்திவிண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கண்டு காதல் வயப்பட்டு, ஒருதலைக்காதலால் அவரையே சுற்றிச் சுற்றி வந்துள்ளார்.
வழக்கமான காதல் கதைகளில் வருவது போல், அந்தப் பெண்ணைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் ரொமாண்டிக் லுக் விட்டு, அவரையே சுற்றிச் சுற்றி வந்து ஏகப்பட்ட திறமைகளையும் காட்டியுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணுக்கோ இவற்றில் துளியும் விருப்பம் இல்லாமல் போய், விலகிச் சென்றிருக்கிறார். ஆனாலும் அந்த இளைஞர் விடுவதாயில்லை.
இவரது ஒருதலைக் காதல் விவகாரத்தை அந்தப் பெண்ணுக்கு வேண்டிய நண்பர்களும், உறவினர்களும், கிராம மக்களும் என பலரும் கவனித்து வந்துள்ளனர். இதற்கு முடிவு கட்ட ஒரு நாள் வரும் என்று நினைத்திருக்கின்றனர்.
கடந்த வாரம் ஒரு நாள், தனது செல்போன் எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அதை அந்தப் பெண்ணின் பின் சென்று அவரை நோக்கி வீசியுள்ளான் அந்த இளைஞன். இதனால் கோபமும் அச்சமும் அடைந்த அந்தப் பெண், குய்யோ முறையோ என்று கத்தி கூப்பாடு போட்டார். அந்த சத்தத்தில் ஒட்டுமொத்த கிராமமும் திரண்டு விட்டது.
அவ்வளவுதான்… அந்த இளைஞனை சுற்றி வளைத்தனர். சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். அந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த அந்த இளைஞன் கையெடுத்துக் கும்பிட்டு, விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளான்.
அந்த இளைஞனை குறிப்பிட்ட அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அவனும் அவ்வாறே கேட்டான். ஆனாலும் கோபம் அடங்காத கிராமத்தினர், அவனது ஆடைகளைக் களைந்தனர். அவனை நிர்வாணமாக்கி, அவனது பைக்கில் ஏற்றி, துரத்தி விட்டனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகத் தளங்களில் வைரலானது. இது போலீஸாரின் கவனத்துக்கும் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் புகார் கொடுக்கவில்லை என்றாலும், வீடியோவை வைத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.