
ஐதராபாத் இளம் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, கொடூரமான முறையில் லாரி டிரைவர்களால் பலாத்காரம் செய்யப் பட்டு எரித்துக் கொல்லப் பட்ட சம்பவம் ஹைதராபாத் நகரை உலுக்கி எடுத்துள்ளது.
காலை முதலே குற்றவாளிகளை தங்கள் கண் முன் தூக்கிலிட வலியுறுத்தி ஏராளமான பொது மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். ஷாத் நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், தங்கள் கண் முன்பு குற்றவாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

காலையிலிருந்து உணவோ தண்ணீரோ இன்றி போராடும் பொதுமக்கள் போராட்டம், எவருடைய செவிசாய்ப்புக்கும் இடமின்றி தொடர்ந்து வருகிறது.
தங்கள் காவல் நிலையத்தில் இருந்து குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்த இயலாமல் போலீஸார் தவித்தனர். இதனால், ஷாத் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்தார் மாஜிஸ்ட்ரேட் பாண்டு நாயக்!

மாஜிஸ்திரேட் முன் குற்றவாளிகளை போலீஸார் ஆஜர்படுத்தினர்! அப்போது, குற்றவாளிகளை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

காலை முதல் இன்னமும் நகராமல் உள்ள போராட்டக்காரர்களால் குற்றவாளிகளை உடனே சிறைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து போனபின்னர், நள்ளிரவில் சிறைக்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்தனர்.

குற்றவாளிகளை உடனே தூக்கில் இடும்படி போராட்டம் நடத்தி வருகின்றனர் பொதுமக்கள். சிலரோ, என்கவுண்டரில் போட்டுத் தள்ளும்படி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் ஹைதராபாத் நகரமே பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்து, அடித்து துரத்திவிடும் முயற்சியில் இறங்கினர். பின்னர், குற்றவாளிகளை மெகபூப்நகர் சிறைக்கு எடுத்துச் செல்ல பாதுகாப்பு வாகனம் வந்தது. அதில் கைதுசெய்யப் பட்ட நால்வரையும் ஏற்றி பொதுமக்களிடம் இருந்து பாதுகாப்பாக நகர்த்தி சிறைக்குக் கொண்டு சென்றனர்.