9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
supreme court election commission - 2026

அண்மையில் பிரிக்கப் பட்ட / புதிதாக உருவாக்கப் பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 9 மாவட்டங்களில் நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என்று ஏற்கெனவே மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழக்கியது.

வார்டு வரையறை பணிகளை முடித்த பின்னர், வரும் 4 மாதங்களுக்குள் மீதமுள்ள 9 மாவட்டங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் டிச., 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும் எனவும், வாக்கு எண்ணிக்கை 2020 ஜன.,2ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல், தேர்தலை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், நேற்று விசாரணை நடத்திய நீதிமன்றம், தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குவதாக இருந்தது.

இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று கூறியுள்ளதால், மற்ற மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.