காலாவதி ஆவதால் நில அவசரச் சட்டம் புதுப்பிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ஏப்.5 ஆம் தேதியுடன் காலாவதியாவதால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நிலம் கையகப் படுத்தல் தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் 9 திருத்தங்களுடன் மக்களவையில் கடந்த மாதம் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் வரும் 5-ம் தேதியுடன் காலாவதி ஆக உள்ளதால், மீண்டும் அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வசதியாக மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.