carona virus fear farmer suicide - 2026

கரோனா வைரஸ் தனக்கு தொற்றிவிட்டது என்ற பயத்தில் சித்தூரில் நடுத்தர வயது விவசாயி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தனக்கு வந்துவிட்டது என்ற பயத்தால்… 50 வயது விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன் தன்னுடைய மொபைலில் கரோனா வைரஸ் குறித்த பல வீடியோக்களை பார்த்து தனக்கு வந்துவிட்டதாக எண்ணி தன் குடும்பத்தாரிடம் தன் அருகில் வர வேண்டாம் என்று கல்லை எறிந்து விரட்ட ஆரம்பித்தார். வீட்டை விட்டுத் தொலைவில் தன் தாயின் சமாதிக்கு அருகில் ஒரு மரத்தில் தூக்கிட்டு இறந்தார்.

இந்த சோகமான நிகழ்வு தொட்டம்பேடு மண்டலம் சேஷமநாயுடு கன்ட்ரீக அருந்ததிவாடாவில் நடந்தது .

50 வயதான விவசாயி கே. பாலகிருஷ்ணா பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஜலதோஷம், ஜுரம் இருப்பதாக திருப்பதி மருத்துவமனையில் பிப்ரவரி 5ஆம் தேதி காட்டியுள்ளார். டாக்டர்கள் அவருக்கு மருந்து கொடுத்து வைரல் இன்பெக்சன் என்று சொல்லி முகத்திற்கு மாஸ்க் அணியும்படி கூறினார்கள்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

அங்கு இரண்டு நாட்கள் ஓர் உறவினர் வீட்டில் தங்கி விட்டு வீட்டுக்குத் திரும்பினார். ஆனால் அவருக்கு ஜலதோஷம் குறையவில்லை. தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தார். குடும்பத்தாரை அருகில் வரவிடவில்லை. அவருடைய மனைவியும் அவருடைய மூன்று குழந்தைகளும் மற்றும் கிராமத்தாரும் அவரிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தனர். அவருக்கு கரோனா வைரஸ் வரும் வாய்ப்பில்லை என்றும் வந்திருந்தால் டாக்டர்கள் அவரை வெளியே விட்டிருக்க மாட்டார்கள் என்றும் எடுத்துக் கூறினார்.

ஆனால் அவர் கேட்கவில்லை. அவருடைய மகன் பாலமுரளி ஆந்திராவில் கிராம வாலன்டீராக பணிபுரிகிறார்.

அவர் இது குறித்துக் கூறிய போது… என் தந்தை எப்போதும் தன் மொபைலில் கரோனா வைரஸ் குறித்த அறிகுறிகள் பற்றிய வீடியோக்களை பார்த்துக்கொண்டு காலம் கழித்தார். நாங்கள் அருகில் சென்றால் எங்களை கல்லை விட்டெறிந்து துரத்துவார் என்று கூறினார்.

செவ்வாய் அன்று அதிகாலையில் வீட்டை வெளிப்பக்கம் பூட்டி விட்டுச் சென்று விட்டார் . அவர் மனைவி லட்சுமிதேவி அந்த அதிகாலை நேரத்திலும் எழுந்து அண்டை அயலாரை கூப்பாடு போட்டு கதவை திறந்து பார்த்து அவரைத் தேட ஆரம்பித்தனர் . பாலகிருஷ்ணா கிராம எல்லையைத் தாண்டி மயானத்தின் அருகில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தொங்கினார்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

“என் தந்தைக்கு தன் மூலம் கிராமத்தாருக்கு கரோனா வைரஸ் பரவி விடும் என்ற பயம் அதிகமானதால் இவ்வாறு தன்னை மாய்த்துக் கொண்டார்” என்று அவர் மகன் தெரிவித்தார். தொட்டம்பேடு காவல் உதவி ஆய்வாளர் வேங்கட சுப்பையா, “குடும்பத்தினர் எந்த புகாரும் அளிக்காததால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” என்று கூறினார்.

ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் இதுவரை கரோனா வைரஸ் தாக்கம் குறித்து எந்த ஒரு நோயாளியின் விவரமும் பதிவாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending