December 8, 2024, 2:57 PM
30.5 C
Chennai

வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம்! புல்வாமா முதலாம் ஆண்டு அஞ்சலி!

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது.

2019, பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணம் சென்றனர். அப்போது காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில்- ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்கள் வரிசையாக சென்றன.

அப்போது, தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் கிராமப்புறச் சாலையில் இருந்த ஒரு சிறிய கார் வேகமாக வந்து துணை ராணுவப்படையினர் சென்ற ஒரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் மிகப்பெரிய சத்தத்துடன் அந்த கார் வெடிக்கப் பேருந்தில் இருந்த 40 துணை ராணுவப்படையினரும் உடல் சிதறி பலியானார்கள்.

நாட்டின் எல்லையைக் காக்கச் சென்ற துணை ராணுவப் படையினர், தீவிரவாதிகளின் கோரப் பற்களுக்கு இரையாகினர். தேசத்தையே இந்த தாக்குதல் உலுக்கியது. எந்த குற்றமும் செய்யாத சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது மக்களின் மனதில் கொதிப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றுகையில், ” சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினர் சிந்தும் கண்ணீருக்குப் பதில் அளிக்கப்படும். ராணுவத்தினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

ALSO READ:  ஐந்து நாள் கொண்டாடப்படும் அட்டகாசமான தீபாவளி!

கொடூரமான புல்வாமா தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. தீவிரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் முயற்சிக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

கோழைத்தனமான, கொடூரமான இந்த புல்வாமா தாக்குதலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அனைத்து உறுப்பு நாடுகளும் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தன. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் சீனா, இந்த முறை தீர்மானத்துக்கு ஆதரவாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப் பலமுறை இந்தியா முயற்சி மேற்கொண்ட போதும் சீனா அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து, இந்திய அரசு எடுத்த பல ராஜதந்திர நடவடிக்கைகளால், மே 1-ம் தேதி மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அறிவிக்கப்பட்டார்

இந்த தீர்மானத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்றின. இதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் சீனா ஆதரவு அளித்தது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா பகுதியில் உள்ள பாலகோட் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியது

பாலகோட் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்துத் திரும்பியது.

ALSO READ:  ரயில் கவிழ்ப்பு முயற்சி பயங்கரவாதச் செயலே: தடுக்க தனி சட்டம் தேவை!

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் ஏராளமானோரும், தீவிரவாத பயிற்சி பெற்றுவந்தோர், மூத்த கமாண்டர்கள் பலரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

அதன்பின் பிப்ரவரி 27-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களை அழிக்க பாகிஸ்தான் விமானப்படை முயன்றபோது இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களைத் துரத்தியது.

இந்த துரத்தலில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி விமானத்தில் இருந்து குதித்தார்.

அபிநந்தன் வர்த்தமான் குதித்து உயிர் தப்பிய பகுதி பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்ததால், அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து அழைத்துச் சென்றது.

இரு நாட்டு அரசு உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுக்குப்பின் இரு நாட்களுக்குப்பின் அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் ராணுவத்தினர் வாகா எல்லை வழியாக பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். அபிநந்தனுக்கு இந்திய மக்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் உறவில் பல்வேறு விரிசல்கள் இருந்து வந்த நிலையில் இந்த புல்வாமா தாக்குதலுக்குப்பின் அந்த உறவு மேலும் மோசமானது.

ALSO READ:  சரவெடி தடையை நீக்க சட்டப்படி நடவடிக்கை: எல்.முருகன் உறுதி!

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை என்ஐஏ விசாரித்து வருகிறது. ஓர் ஆண்டு ஆகியும், தீவிரவாதி அதில் அகமது தார் முகமதுவுக்கு எவ்வாறு சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கிடைத்தன என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு மிக சக்திவாய்ந்த 25 கிலோ பிளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ் பயன்படுத்தப்பட்டது தடயவியல் ஆய்வில் தெரியவந்தது.

இந்த தாக்குதலில் முக்கியக் குற்றவாளிகள் முடாசிர் அகமது கான், சஜித் பாத் ஆகியோர் கொல்லப்பட்டதால், என்ஐஏ இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இன்னும் இந்த விசாரணையில் பல்வேறு விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன.

இந்த தாக்குதலில் யாரெல்லாம் ஈடுபட்டுபட்டது, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் எங்கு வாங்கப்பட்டது, யாரிடம் இருந்தது, வாகனத்தை எத்தனை பேர் ஓட்டிவந்தார்கள், வெடிபொருட்கள் எங்கு வாங்கப்பட்டன, பண உதவி எவ்வாறு கிடைத்தது எனப் பல புதிரான கேள்விகள் இருக்கின்றன.

புல்வாமா தாக்குதல் நிச்சயம் உளவுத்துறை தோல்வியால் நடந்தது அல்ல. நிச்சயம் என்ஐஏ விசாரணையில் உண்மைக் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week