மலை மீதிருக்கும் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தின் தேருக்கு தீ வைக்கப்பட்டது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கண் முன்பே கோயில் தேர் தீப்பிடித்து எரிந்து கருகியதைக் கண்டு பக்தர்கள் அலறித் துடித்தனர்.
நெல்லூரில் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி தேருக்கு தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தேர் தீயில் முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பல்லி ஸ்ரீநிவாஸ் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி தேருக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போகோலு மண்டலம் பிட்ரகுண்ட மலைமீது ஸ்ரீபிரசன்ன வேங்கடேஸ்வர சுவாமி தேர், பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை அதிகாலை தீப் பற்றி எரிந்தது.
கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தேரில் நெருப்பு பற்றி எரியவே உள்ளூர்வாசிகள் அக்கம் பக்கத்தினர் உடனே அதைக் கண்டு தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள்ளாகவே தீ பரவி தேர் முழுவதுமாக எரிந்து போனது. தேருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து விட்டார்கள் என்று கிராமத்தினர் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் கண் முன்பே தங்கள் ஸ்வாமியின் தேர் தீவைத்து எரிக்கப்பட்டு முழுவதுமாக எரிந்து கரியானதில் கடும் கோபம் அடைந்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் பிரமோத்ஸவத்தின் போது ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமி ரதோத்ஸவம் இங்கே நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோத்ஸவம் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தை காவலி எம்எல்ஏ ராமிரெட்டி பிரதாப் குமார் ரெட்டியும் பிட்ரகுண்ட எஸ்ஐ பரத்குமாரும் பார்வையிட்டனர். தேருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பற்றி அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம்பள்ளி ஸ்ரீநிவாஸ் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
செய்தி அறிந்த உடனே மாவட்ட எஸ்பி.,யுடன் போனில் தொடர்பு கொண்டார். குற்றவாளிகளை உடனே கண்டறிந்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கோவில் பிரமோத்ஸவம் தொடர்பாக இரண்டு பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப் படுகிறது.