தில்லி அசோக் விகாரில் மசூதியை சூறையாடுவதாகக் காட்டும் வீடியோ போலியானது: போலீசார்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
mosque delhi - 2026

புதுதில்லி: தில்லியின் அசோக் நகர் / அசோக் விஹாரில் ஒரு குழுவினர் ஒரு மசூதியை சூறையாடுவதைக் காட்டும் வீடியோ போலியானது என்று கூறியுள்ளனர் தில்லி போலீஸார்.

வடகிழக்கு தில்லியில் வெடித்த வகுப்புவாத வன்முறைகளை அடுத்து இதுவரை ஒரு போலீஸ்காரர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் இதனை உறுதி செய்துள்ளனர்.

தில்லி சிட்டி போலீஸின் வடமேற்கு தில்லி பிரிவு ஓர் அறிக்கையை வெளியிட்டது! “அசோக் விஹார் பகுதியில் ஒரு மசூதிக்கு சேதம் ஏற்பட்டது போன்று சில தவறான தகவல்கள் / செய்திகள் பரவி வருகின்றன. அசோக் விஹார் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்து கிறோம். தயவுசெய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.” என்று கூறியுள்ளனர்.

ஒரு மசூதியின் மினாரில் ஏறி, அதில் ஓரிருவர் ஏறி ஒரு அனுமன் கொடியை நட்டு வைக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதனைக் குறிப்பிட்டு, தற்போது தில்லி போலீசாரின் இந்த அறிக்கை வந்துள்ளது. அந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்ட சிலர், இந்த சம்பவம் அசோக் விஹாரைச் சேர்ந்தது என்றும், சிலர் இது அசோக் நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினர்.

இதே சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மற்றொரு வீடியோவில், மசூதி தீப்பிடித்தது மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீப்பிழம்புகளை அணைப்பதைக் காண முடிந்தது. இருப்பினும், அசோக் விஹார் பகுதியில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தில்லி போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சிலர் இது இரு வருடங்களுக்கு முன்னர் பீகாரில் நடந்த சம்பவம் என்று கூறி ஒரு செய்தியைப் பகிர்ந்தனர்.

இதனிடையே, தில்லி தனியார் டிவியின் நிருபர், ஒளிப்பதிவாளர் என இருவர் இது போன்று ஒரு மசூதி தீப்பிடித்ததை படம் எடுத்த போது வன்முறையாளர்களால் தாக்கப் பட்டனர் என்று செய்திகளைப் பரப்பினர்.

இவ்வாறு பரப்பப் படும் தகவல்களால் மேன் மேலும் வன்முறைக்களம் சூடுபிடிக்கிறதே தவிர, அமைதி திரும்பாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.