கோவிட்-19 எனப்படும் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடாளுமன்றம் தனக்கு முட்டுக்கட்டை என்று கருதிய ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பான் அவையில் தனக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி அவசரகால அதிகாரங்களை கையகப்படுத்திக் கொண்டார். இப்போது நீதிமன்ற குறுக்கீடு இல்லாமல் ஆணை பிறப்பித்தே ஹங்கேரியை அவரால் ஆண்டு வர முடியும். அவர் எடுக்கிற நடவடிக்கையை விமர்சித்தால் ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனை உண்டு.
அசாதாரண சூழ்நிலைகளில் அசாதாரண நடவடிக்கைகள் தேவை, சில நியாயமாகவும் இருக்கும். ஆனால் நோய் பரவுவதைக் காட்டி சில அதிபர்கள் அதிகாரங்கள் அனைத்தையும் குவித்துக் கொண்டு எதேச்சாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்துவதாக விமர்சகர்கள் சிலர் வாதம் முன்வைக்கிறார்கள். இங்கே நான் குறிப்பிடுவது ரஷ்யாவையும் சீனாவையும் அல்ல.
கொரோனோ பெருந்தொற்றோடு மல்லுக்கட்டுவதற்காக பிரிட்டன், இஸ்ரேல் போன்ற ஜனநாயக நாடுகள் அவசர கால நடவடிக்கைகளை நாடும் கட்டாயத்துக்குள் தள்ளப் பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நீதிமன்றங்களை எல்லாம் இழுத்து மூடச் சொல்லி விட்டார் (தன் மீது உள்ள வழக்குகளை தவிர்ப்பதற்காக இப்படி என்று சிலர் விமர்சிக்கிறார்கள்); குடிமக்களை வெகுவிரிவாக கண்காணிக்க உள்துறை சார்ந்த அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்; ஊரடங்கை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை அளிக்கிறார்.
ஜனநாயக அமைப்புகளும் ஜனநாயக நடைமுறையும் திடமாக உள்ள பிரிட்டனில் மக்களை காலவரை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கவும் கைது செய்யவும் பல்வேறு அமைச்சகங்களுக்கு அதிரடியான அதிகாரங்களை தரக்கூடிய கொரோனா தொடர்பான மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்துகையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாட் ஹான்காக், “இது நமக்குப் பழக்கம் இல்லாத பாதை” என்று ஒப்புக் கொண்டார்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ துதெர்த், தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான் ஒசா இருவருக்கும் அந்தந்த நாடுகளின் அரசுகள் பரிபூரண அதிகாரம் வழங்கியுள்ளன. ஆயிரக்கணக்கில் மக்களை தனிமைப்படுத்தல் செய்வதற்காக இத்தாலியும் ஸ்பெயினும் தங்கள் ராணுவத்தினரை துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது. ஹங்கேரி, லெபனான், மலேசியா, பெரு உள்ளிட்ட மற்ற பல நாடுகளிலும் கட்டுப்பாடுகளை செயல்படுத்த ராணுவத்தினரை வீதிக்கு வரவழைத்தார்கள். ராணுவத்தினரை உதவிக்கு அழைத்த நாடுகளில் பிரிட்டனும் ஜெர்மனியும் கூட இடம்பெறுகின்றன. பிரிட்டன் 20,000 ராணுவத்தினரை கொண்ட “கோவிட் எதிர்வினை படையணி” என்பதாக ஒன்றை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில், மக்களை காலவரையின்றி விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கவும் தஞ்சம் நாடி வருகிறவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு தருவதை நிறுத்தவும் டொனால்டு டிரம்ப் அரசு ஆரம்ப கட்டத்தில் முயற்சி செய்தது. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் தலையிட்டு சட்ட அமைச்சகத்தின் ஆசைகளுக்கு வலுக்கட்டாயமாக வரம்பு கட்டியது. ஊரடங்கு விஷயத்தில் பல்வேறுமாநிலங்களின் ஆளுநர்களுக்கு பிரத்யேக அதிகாரம் உள்ளதால் அதிபர் டிரம்ப் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.
இவற்றை எல்லாம் பாரத நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி செய்து வருகின்ற செயல்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் அவசரகால அதிகாரம் எதையும் நாடவும் இல்லை, அவசரகால அதிகாரப் பிரயோகம் செய்யவும் இல்லை. தணிக்கை, விசாரணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைப்பது போன்ற கொடூர நடவடிக்கைகளிலும் அவர் இறங்கவில்லை. ஊடகத்திற்கு வாய்ப்பூட்டு என்பது விவரங்கெட்ட கூக்குரல். பொய்ச் செய்திகள் விஷயத்தில் உஷாராக இருங்கள், அரசாங்கப் புள்ளி விவரங்களுக்கு இடமளியுங்கள் என்று மட்டும்தான் ஊடகத்தினரிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ராணுவத்தை மோடி வீதிக்கு கொண்டு வரவில்லை. மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுதலிக்கவில்லை. ஊரடங்குக் கட்டுப்பாடுகள் எல்லாமே பெரிதும் தன்னார்வ அடிப்படையிலானவை. பொது நன்மையை உத்தேசித்து கொண்டு வரப்பட்டவை.
கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு யாரும் யோசனை சொல்லவில்லை என்பதும் இல்லை. ஆனால் எதேச்சாதிகாரப் போக்கில் அல்லாமல் ஜனநாயக வழிமுறையையே சார்ந்திருப்பது என்று முடிவுசெய்தார் மோடி. “இது உலக மகா யுத்தம் போன்றதொரு நிலவரம்” என்று அவரே வர்ணித்த இந்த சூழலில் அடிப்படை மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிற தீர்க்கமான ஜனநாயகவாதியாகத் திகழ்கிறார் மோடி.
கரோனா தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் மோடிக்கு பிரம்மாஸ்திரமாக வாய்த்தது நாட்டு மக்கள் 130 கோடிப் பேரின் விசுவாசம் தான். அண்மையில் நாட்டு மக்களுக்கு அவர் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் “சாஸன், ப்ரசாஸன், ஜனதா ஜனார்தன்” (அரசியல் தலைமை, நிர்வாகத்துறை, கடவுளாகக் கும்பிடத்தக்க மக்கள்) என்னும் இந்த அணிதான் தனது போர்முனைக் கூட்டணி என்று வருணித்தார்.
பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சி என்றாலும் எதிர்ப்பு எதையும் மோடி சந்திக்க வேண்டியிருக்கவில்லை. இது அவரது நம்பகத்தின் உன்னதத்தைக் காட்டுகிறது. அண்மையில் அதிபர் டிரம்ப், ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ இருவருக்குமிடையே எழுந்த சச்சரவை இங்கே நினைத்துப் பார்ப்பது பொருத்தம்.
“மக்களால், மக்களுக்காக, மக்களின்” ஆட்சி என்று ஜனநாயகம் பற்றி பல்லவி பாடுவார்கள், கேட்டிருப்போம். எனினும் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் “மக்களால்” என்பது பேச்சுக்குத்தான். அதையெல்லாம் மாற்றிப் போட்டு விட்டார் மோடி. அவர் மக்களை வெறும் வாக்காளர்களாகவோ பார்வையாளர்களாகவோ மட்டும் பார்ப்பவர் அல்ல. ஆளுகையில் அவர்களை பங்குதாரர்கள் ஆகிவிட்டார் அவர்.
முதன் முதலில் துவக்கப்பட்ட பெரிய இயக்கமான ஸ்வச் பாரத் முதல் பெருந்தொற்றுக்கு எதிரான இன்றைய போர் வரை படிப்படியாக மக்கள் பங்களிப்பு அதிகரிக்கச் செய்யும் கலையில் தான் கைதேர்ந்தவர் என்று நிரூபித்திருக்கிறார்.
’சட்டத்தின் ஆட்சி’க்கும் ’சட்டப் படி’ ஆட்சிக்கும் சுவாரசியமான வித்தியாசம் உண்டு என்கிறார் பிரான்சிஸ் புகுயாமா. ஜனநாயகத்தில் நடக்கும் ’சட்டத்தின் ஆட்சி’யில் அரசியல் சாசனம் சொல்லுகிற விதிகள்தான் ராஜா. எதேச்சாதிகாரிகளோ ஜனநாயக உணர்விலிருந்து அடியோடு விலகிப் போய் ’சட்டப் படி’ ஆட்சி நடத்தப் பார்ப்பார்கள். சட்டத்தின் ஆட்சிதான் தனக்கு வேதம் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டார் மோடி.
நடவடிக்கை எடுத்த எடுக்கத் தூண்டும் சம்பவமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. சில மதக் குழுக்கள் வேண்டுமென்றே ஊரடங்கை மீறி நடத்திய ’தப்லீகி ஜமாத் மர்கஸ்’ போன்ற சம்பவங்களும் பெரிய எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்ட சம்பவங்களும் நடக்கவே செய்தன. மாநில அரசுகளே ஊரடங்கு விதிகளை மீறும் காட்சிகளும் அரங்கேறின.
ஆனால் மோடி தான் கையில் எடுத்த பாணியை கைவிடவில்லை. மக்களின் உள்ளார்ந்த நல்லதனத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார். தனது மிக சமீபத்திய உரையில் மக்களை ஈசன் என்று வர்ணித்து அந்த ஈசன் தனது மஹா சக்தியை காட்டி விஸ்வரூப தரிசனம் தர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணி வகிக்கும் ஊழியர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில் கைதட்டச் சொன்னபோதும் விளக்கு ஏற்றச் சொன்ன போதும் மக்கள் அளித்த வரவேற்பே பாரத மக்கள் அவருக்கு மகத்தான பின்பலமாக விளங்குவதை எடுத்துக்காட்டி விட்டது.
கொரோனா பெருந்தொற்றை எதிர்த்த போரை வித்தியாசமான ஒரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் மோடி. அறிவியல் பூர்வமான வழிமுறைகளை தேர்வு செய்தார்; தொழில்நுட்பத்தை பெரிய அளவில் களமிறக்கினார்; தனது யுத்தத்தில் 130 கோடி மக்கள் ஈடுபாட்டுடன் இறங்கச் செய்தார். நிலவரத்தை புதுமையான விதத்தில், ஒரு தீர்க்கதரிசியின் பார்வையுடன் கையாண்டதில் உலகிற்கு மோடி புதியதொரு மந்திரம் தந்துள்ளார்: “மனித சார்புள்ள வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு”.
கட்டுரையாளர்: ராம் மாதவ்
(தேசிய பொதுச் செயலாளர், பாஜக., & இந்தியா ஃபவுண்டேஷன் ஆளுநர்கள் குழு உறுப்பினர்)
தமிழாக்கம் உதவி: மகாதேவன்