
கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 ஆயிரத்து 427 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4325 பேர், குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மலப்புரத்தைச் சேர்ந்த அக்குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு 3 மாதமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளது.
இந்நிலையில் அக்குழந்தைக்கு அண்மையில் கொரோனாவும் பாதிக்கப்பட்ட நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் அவை பலன் அளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இதுவரை 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 23ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்



