
புதுதில்லி :
குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ், பாஜக., இரு தரப்புமே குழுக்களை அமைத்துள்ளது.
வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரப்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத் தலைமை வகிக்கும் இந்தக் குழுவில் திமுக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்டிரிய ஜனதா தளம்,தேசியவாத காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
அதேபோல், பாஜக., தரப்பில் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் முழு ஈடுபாடு காட்டி வருகிறது. பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷா, தனது அருணாச்சல பிரதேச பயணத்தை ஒத்திவைத்து விட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் பரிந்துரைகளை அளிக்குமாறு பா.ஜ.க, கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களிடமும் குடியரசுத்தலைவர் வேட்பாளர் குறித்த பரிந்துரைகளை அளிக்கும்படி கேட்டுள்ளது. மேலும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க, மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் இது தொடர்பாகப் பேசும்.
வரும் ஜூலை 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் ஜூன் 14 ஆம் தேதி துவங்குகிறது. இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூலை 20 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.



