
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது யாசகம் கேட்கும் பெண் மீது காதல் கொண்ட இளைஞர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலித் பிரசாத். இவரிடம் டிரைவராக இருப்பவர் அனில். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தெருவோரங்களில் வசிப்பவர்கள் அவதிப்படுவதை அறிந்த லலித் பிரசாத் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் பணியை தொடங்கினார்.

கான்பூர் நகரில் பல்வேறு தெருக்களுக்கும் அவர் தனது டிரைவர் அனிலுடன் சென்று உணவு வழங்கி வந்தார். அப்போது டிரைவர் அனிலும் உணவு பொட்டலங்களை எடுத்துச் சென்று கொடுப்பது உண்டு.
தினமும் அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் உணவு வழங்கும்போது ஒரு இளம்பெண் தனது தாயுடன் உணவு வாங்குவதை அனில் கண்டார்.. அப்போது அந்தபெண்ணுக்கும் டிரைவர் அனிலுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் நிலை குறித்து அனில் விசாரித்தார்.
அதற்கு அவர் தனது பெயர் நீலம் என்றும் தனது தந்தை இறந்துவிட்டார். தாய் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் சகோதரர் தன்னையும் தாயையும் வீட்டை விட்டு விரட்டி விட்டார் என்றும் வீட்டை விட்டு வெளியேறிய தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கதையை கேட்டு அனில் மனம்வருந்தினார். பின்னர் அந்த பெண்ணை அனில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து தனது முடிவை முதலாளியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அனில்- நீலம் இருவருக்கும் நேற்றைய தினம் திருமணம் செய்து வைத்தார் லலித் பிரசாத். இதுகுறித்து நீலம் கூறுகையில் கடவுள் என்னை சோதித்ததாக தினமும் அழுவேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்தேன். ஆனால் கடவுள் என்னை கைவிடவில்லை. 7 ஜென்மத்திற்கு இவரே எனக்கு கணவனாக வர வேண்டும் என்றார்.

இந்த திருமணத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. மணமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். இவர்களது திருமணம் குறித்து லலித் பிரசாத் கூறுகையில் நீலமை திருமணம் செய்து கொள்ள அனில் விரும்புவதை அவரது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தோம் என்றார்.