
கொல்லம் :
கொல்லம் நகர காவல் துறை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட அஜீதா பேகம் ஐபிஎஸ்., அப்பதவி வகித்து வந்த அவரது கணவர் சதீஷ் பினோவிடம் இருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அஜீதா பேகமும், கன்னியாகுமரியைச் சேர்ந்த சதீஷும் 2008-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள். இருவரும் ஜம்மு- காஷ்மீர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணியில் இருந்தனர். பின்னர், இருவருக்கும் திருமணம் ஆனது. இதைத் தொடர்ந்து 2011-இல் கொல்லத்துக்கு பணி மாறுதல் பெற்று வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கொல்லம் (ஊரகம்) வருவாய் மாவட்ட எஸ்.பி.யாக அஜீதா பணி புரிந்து வந்தார். அந்த மாவட்டத்தின் நகர்ப்புற எஸ்.பி.யாக சதீஷ் பினோ இருந்து வந்தார். இந்நிலையில் அஜீதா கரு தரித்ததால், மகப்பேறு விடுமுறையில் சென்றார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அஜீதாவின் விடுப்பைத் தொடர்ந்து எஸ்.பி.யாக இருந்த சதீஷ் பினோ, கொல்லம் நகர காவல் துறை ஆணையராக பதவியேற்றார். மகப்பேறு விடுமுறை முடிந்து அஜீதா பணியில் சேர்ந்தபோது, அவரது கணவர் சதீஷ் வகித்து வந்த கொல்லம் நகர காவல் துறை ஆணையராக மாற்றப்பட்டார். அப்பணியில் இருந்து வந்த சதீஷ், பத்தினம்திட்டா மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.
இதனால், கொல்லம் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அஜீதா, தனது கணவர் சதீஷிடம் இருந்து ஆணையர் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மனைவியின் வளர்ச்சிக்கு கணவர் ஊக்குவிப்பதாக பலரும் பாராட்டினர்.
இது குறித்து அவர்களிடம் பேசிய அஜீதா, போதைப் பொருளை ஒழித்து, கொல்லத்தை பாதுகாப்போம் என்ற விழிப்பு உணர்வு பிரசாரத்தை கொல்லம் ஆணையராக இருந்த சதீஷ் தொடங்கியிருந்தார். அதை நானும் தொடர்ந்து செயல்படுத்துவேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கொல்லம் நகரில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அஜீதா தெரிவித்தார்.
/ajeetha-ips-succeeds-husband-as-kollam-top-cop



