
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வெற்றிச் செய்தி, என்று குறிப்பிட்டு ஒரு தகவல் உலா வருகிறது.
அதில், “வெற்றிச்செய்தி! இந்திய எல்லையினுள் நுழைய முயன்ற சீன இராணுவ வீரர்களை அடித்து விரட்டியதோடு மட்டுமில்லாமல் ஒரு சீன இராணுவ வீரரையும் சிறை பிடித்துள்ளது இந்திய இராணுவம்.. மேலும் Norinco VN21 LAV என்ற சீனாவின் இராணுவ வாகனத்தையும் இந்தியா கைப்பற்றி உள்ளது.. எவென்டா சொன்னது இந்தியா சீனாவை தாக்காது என்று..இந்தியாவை இழிவு செய்து பேசிய பாகிஸ்தான் சொம்புகள் பார்க்கிற வரை இந்த வீடியோவை share பண்ணுங்க.. வெற்றி நமதே.. – என்று குறிப்பிட்டு, ஒரு ராணுவ டாங்க் ஒன்று பின்னோக்கிச் செல்வது போன்றும், ஒரு சீன ராணுவ வீரரை இந்திய ராணுவ வீரர்கள் மடக்கிப் பிடித்திருப்பது போலும் சித்திரித்து அந்த வீடியோ பகிரப் பட்டு வருகிறது.
ஆனால் அந்த வீடியோவில், போலீஸ் என்ற தடுப்பு பயன்படுத்திக் கொண்டு, வீரர்கள் நிற்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில், இது போன்ற போலி வீடியோக்கள் வந்தால், அவற்றைப் பகிராதீர்கள் என்று இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த வீடியோவுக்கு இந்திய ராணுவம் நேற்று அளித்த விளக்கத்தில்… சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோ, உண்மையானது இல்லை. வடக்கு எல்லை பிரச்னையுடன் இந்த வீடியோவை இணைக்க முயற்சி செய்வது தவறானது. இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைச் சரிசெய்ய, ராணுவ தளபதிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது லடாக் பகுதியில் எந்த மோதலும் நடைபெறவில்லை. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இது போன்ற முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் இது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லை அருகே அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மே 5ஆம் தேதி லடாக்கில் உள்ள பாங்கோங் சோ எல்லையோரம் 250க்கும் மேற்பட்ட இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்ததாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் சோ, கால்வன் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவுலத் பெக் ஓல்டி பகுதிகளில் மூன்று வாரத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. அதில் பாங்கோங் சோ பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்துதான் இந்திய ராணுவம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. குறிப்பாக, டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பாகிஸ்தான் தொடர்புடைய ‘மர்ம’ நபர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்காக வேலை செய்யும் ‘மர்ம’ நபர்கள் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையை சீர்குலைக்க இது போன்ற போலி வீடியோக்களை வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்றும், மக்கள் இவற்றை இனம் கண்டு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!