
தமிழகத்தில் ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இன்று, சென்னையில் மட்டும் மேலும் 967 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு 23,495 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 413 பேர் குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. .
தமிழகத்தில் மொத்தம் 13,170 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்; அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பால் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 138 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இன்று சென்னையில் மட்டும் 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு 15,770 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த 32 பேருக்கும், தில்லியில் இருந்து வந்த 10 பேருக்கும் நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 48 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.


