
இரண்டு அடுக்கு பயணிகள் ரயில் இயக்கி சாதனை படைத்த இந்தியன் ரயில்வே தற்போது மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளது பயணிகள் ரயில் போன்று சரக்குப் போக்குவரத்தையும் இரண்டடுக்கு ரயிலில் தொடங்கி முத்திரை பதித்துள்ளது இந்தியன் ரயில்வே …
மேற்கு இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்பட்ட தடத்தில் முதல் உயரமான ஓவர் ஹெட் கருவிகளை நியமித்து, வெற்றிகரமாக இரட்டை அடுக்கு சரக்கு ரயில்களை இயக்கி உலக சாதனையை படைத்துள்ளது இந்திய ரயில்வே
இந்த சாதனை உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயின் சமீபத்திய பசுமை முயற்சியாக பசுமை இந்தியாவின் லட்சியப் பணியை இது மேலும் அதிகரிக்கும்.
இதன் மூலம், ஓவர் ஹெட் கருவிகளை நியமித்து இரட்டை அடுக்கு சரக்கு ரயிலை இயக்கும் முதல் ரயில்வே ஆனது, இந்திய ரயில்வே. இதன் செயல்பாடுகள் ஜூன் 10 (புதன்கிழமை) குஜராத்தின் பாலன்பூர் மற்றும் பொட்டாட் நிலையங்களில் இருந்து வெற்றிகரமாக தொடங்கி வைத்து இயக்கிப் பார்க்கப் பட்டது என்று ரயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள அரசு சரக்கு ரயில் சேவையில் புதுமை, வேகம் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றை முன்வைக்கிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்
இந்த கொரோனா காலத்திலும், ஏப்ரல் 1 முதல் ஜூன் 10 வரை, இந்திய ரயில்வே தனது தடையில்லா சரக்கு ரயில் சேவைகளின் மூலம் 178.68 மில்லியன் டன் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது. மார்ச் 24 முதல் ஜூன் 10 வரை 32.40 லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்று ரயில்வே அமைச்சகம் கூறியள்ளது.
இதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் மூலம் உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள், பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி, உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.