புது தில்லி:
புது தில்லிக்கு வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராம்நாத் கோவிந்தைப் பார்த்துப் பேசி, வாழ்த்து தெரிவித்துவிட்டு, பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்று கூறியுள்ளார் வா.மைத்ரேயன்.
முன்னதாக இன்று காலை வெளியான ஒரு நாளிதழின் பத்திரிகைச் செய்தியில், பன்னீர்செல்வம் கையில் பூங்கொத்துடன் நின்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி பூங்கொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு வணக்கம் மட்டுமே தெரிவித்துவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், இதனால் பன்னீர்செல்வம் விரக்தி அடைந்ததாகவும் செய்தி வெளியானது. மேலும், பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்துப் பேச நேரம் கேட்டார் என்றும், ஆனால் பிரதமர் அலுவலகம் அனுமதி கொடுக்கவில்லை என்றும், அதன்பின் பன்னீர்செல்வம் நேரடியாக மைத்ரேயன் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள வா.மைத்ரேயன், நேற்று மாலை பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், மனுவை தாக்கல் செய்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த பன்னீர்செல்வம், பின்னர் அளித்த பூங்கொத்தை மோடி பெற்றுக் கொண்டார் என்பதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது என்று அதனை தம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும் தினகரன் நாளிதழில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது என்பதற்கு நான் அனுப்பிய புகைப்படங்களே சான்று என்றும் மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.



