
புது தில்லி:
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் ஆகியோர் காட்டிய வழியில் செயல்படுவேன் என்று நாட்டின் 14வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக செவ்வாய்க்கிழமை இன்று பதவியேற்று கொண்டார் ராம்நாத் கோவிந்த். பதவியேற்புக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-:
பணிவுடன் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இந்தப் பதவி கிடைத்துள்ளது எனக்குப் பெருமை அளிக்கிறது. நான் சிறிய கிராமத்தில் பிறந்தவன். மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். பதவியை அளித்த அனைத்து இந்தியர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். எனது பணியை திறம்படச் செய்வேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன். இந்த நாடாளுமன்றத்தில் நான் உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் மற்ற உறுப்பினர்களுடன் சில விவகாரங்களில் உடன்பாடும் சில விவகாரங்களில் முரண்பாடும் ஏற்பட்டதுண்டு. ஆனால், ஒருவருக்கு மற்றவர் மரியாதை தருவது என்பதை இங்கே நாங்கள் கற்றுக் கொண்டோம்.
முன்னேற்றத்துக்கு ஒருமைப்பாடு அவசியமானது பரந்த பன்முகத்தன்மை உடைய மக்களை கொண்டுள்ள நமது நாடு என்பதை தொடர்ந்து நிலைநாட்டி வந்துள்ளது. அமைதியான நாடான இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு நாம் அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. முன்னேற்றம் என்பது நாட்டின் கடைக்கோடியையும் சென்றடைய வேண்டும்.
இந்தியா 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. அனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும் போது நாடு வளர்ச்சி பெறும். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் காட்டிய வழியில் செயல்படுவேன். நம் நாட்டின் பன்முகத் தன்மை பெருமைக்கு உரியது. நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமகனும் நாட்டை உருவாக்குகின்றனர். அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது. இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம். டிஜிட்டல் இந்தியா நமது இலக்கு. உலகம் நமது குடும்பம் என்ற கொள்கையில், இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது. நாம் பல சாதனைகளைப் படைத்துள்ளோம்.
இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இன்றைய உலகத்தில் இந்தியாவின் குரலுக்கு மதிப்பு உள்ளது. அனைத்து துறைகளிலும் வல்லமை பெற்ற நாடு என்னும் வகையில் நமது கனவு இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது தலையாய பணியாக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது. ஆனால், அதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்… என்று பேசினார்.
Photos of #PresidentKovind being sworn-in as the 14th President of India pic.twitter.com/8oWT1ZZ7df
— President of India (@rashtrapatibhvn) July 25, 2017
Photos of #PresidentKovind at the inter-services Guard of Honour in the Forecourt of Rashtrapati Bhavan pic.twitter.com/Y2jJ7shCfF
— President of India (@rashtrapatibhvn) July 25, 2017



