புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் சில நிறைவேற்றப் பட வேண்டியிருப்பதால், கூட்டத் தொடரை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இன்று காலை நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்கள் மீதான தேர்வுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிலக்கரி மசோதா மீதான தேர்வுக் குழு அறிக்கை எந்த வித திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலும் ஏற்கப்பட்டது. அதேநேரம், சுரங்க மசோதா மீதான தேர்வுக்குழு அறிக்கையில் 2 திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு ஏற்கப்பட்டது. ஆனால் மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது குறித்து பிரச்னை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு வசதியாக பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், திரிணமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தள கட்சிகள் ஆதரவு இருப்பதால் மசோத்தாக்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
