
பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம் சிங்க்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
முன்னதாக, தனக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்று நீதிபதியிடம் ராம் ரஹீம் கண்ணீர் விட்டு அழுது மன்றாடினார். மேலும், அவரது வழக்கறிஞரும், ராம் ரஹீம் சமூகப் பணிகள் பல செய்து வருவதால், அவருக்கு தண்டனையில் இருந்து வெளிவர கருணை காட்டுமாறு கோரினார். ஆனால், அரசுத் தரப்போ ராம் ரஹீமுக்கு அதிக பட்ச தண்டனை விதிக்கும்படி கோரியது. இந்நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே ராம் ரஹீமுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர்கள், இந்த தண்டனை விவரம் குறித்து தங்களது மகிழ்ச்சியின்மையை பதிவு செய்தனர்.
ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று அறிவித்த போதே, பெரும் வன்முறை மூண்டது. 38 பேர் உயிரிழந்தனர். பெரும் கலவரத்தில் வாகனங்கள் தீவைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் ராம் ரஹீம் சிங் ஆசிரமம் இருக்கும் சிர்ஸா பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.



