
புது தில்லி:
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தொல்லைகள் குறித்து அப்போதே பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார் பாதிக்கப்பட்ட பெண் துறவி.
தேரா சச்சா சௌதா மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கை, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று கடந்த வெள்ளிக் கிழமை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இவ்வாறு ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்குவதற்கு காரணமாக அமைந்தது பாதிக்கப்பட்ட ஒரு பெண் துறவியின் கடிதமே!
கடந்த 2002ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும், ஹரியானா பஞ்சாப் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அந்தப் பெண் துறவி கடிதம் எழுதினார். தனக்கும் அங்கிருக்கும் பெண் துறவிகளுக்கும் நேரும் தொல்லைகள் குறித்து அந்தக் கடிதத்தில் அவர் விரிவாக எழுதியிருந்தார். அவர் எழுதிய இந்தக் கடிதமே, இந்த வழக்கின் துவக்கமாக அமைந்தது. அதை அடுத்தே சிபிஐ தனது விசாரணை மேற்கொண்டது.
பாதிக்கப்பட்டவர் எழுதிய கடிதத்தில் என்னை போன்று ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். நான் பஞ்சாபை சேர்ந்தவள். எனது குடும்பத்தினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தர்கள். அவர்களின் விருப்பப்படி நான் சிர்ஸா ஆசிரமத்தில் பெண் துறவியானேன். ஆசிரமத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம்ரஹீம் இருந்தார். ஒருநாள் காலை 10 மணிக்கு என்னைத் தன் அறைக்கு வருமாறு அழைத்தார். அங்கே படுக்கையில் அவர் அமர்ந்திருக்க, அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஆபாசப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அவரது தலையணை அருகே கைத்துப்பாக்கி ஒன்றும் இருந்தது. இதனைப் பார்த்ததும், இவர் இப்படிப்பட்டவரா என்று நான் திகைத்தேன். இவர் இப்படி இருப்பார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. டிவி.,யை அணைத்துவிட்டு, தனக்கு விருப்பமான பெண் துறவியாக என்னை தேர்வு செய்திருப்பதாக அவர் கூறினார். எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்த அவர், என்னை அவரது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். நான் மறுத்தேன். ‘கடவுள்’ என்று கூறும் நீங்கள், இப்படிச் செய்யலாமா என்று கேட்டேன். ஆனால் குர்மீத் ராம் ரஹீம், கோபியர்களோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்கவில்லையா? என்றார். அதை ஏற்க மறுத்தேன். எனவே என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். எனக்கு அரசியல் பலம், பண பலம் உள்ளது. எனக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்றார்.
அவர் சொல்படி செய்யாவிட்டால் என்னையும் என் குடும்பத்தினரையும் ஆசிரமத்தில் இருந்து தூக்கி எறிவேன் என்று பயமுறுத்தினார். குண்டர்களை வைத்துக் கொன்று, சாட்சியே இல்லாமல் ஆக்கிவிடுவதாக மிரட்டினார். பின் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இவ்வாறு 3 ஆண்டுகளுக்கு மேலாக அத்துமீறி நடந்து கொண்டார். என்னோடு தங்கியிருந்த சக பெண் துறவிகளையும் அவர் இவ்வாறு பலாத்காரம் செய்தார். அவர்களில் பலர் திருமண வயதைக் கடந்தவர்கள். அவர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. எனது பெயரை பகிரங்கமாக நான் இங்கே குறிப்பிட்டால் என்னைக் கொன்றுவிடுவார்கள். எனக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்தால் உண்மையைக் கூற தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினால் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும்- என்று அந்தப் பெண் துறவி கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு வாஜ்பாய்க்கு அவர் எழுதிய கடிதமே குர்மித் ராம் ரஹீம் சிங் மீதான சிபிஐயின் விசாரணைகளுக்கு துவக்கமாக அமைந்தது.



