ஷியாமென்:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மகுடிக்கு இசைந்தன பிரிக்ஸ் நாடுகள். பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாக சீனாவின் எதிர்ப்புக்கு இடையே கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டன.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ சார்பில் வருடாந்திர உச்சி மாநாடு சீனாவின் துறைமுக நகரான ஷியாமென் நகரில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடியும் இணைந்து கொண்டார்.
நேற்றைய மாநாட்டில் பயங்கரவாதம் தொடர்பான பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு ராஜ்ஜிய ரீதியிலான வெற்றி கிடைத்தது. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பு பயங்கரவாதம் குறித்து ஷியாமென் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கேள்வி எதையும் எழுப்பாது என்று சீன வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது.
பயங்கரவாதத்தை ஒடுக்க பிரிக்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்போர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதம் பற்றி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த கூட்டு பிரகடனத்தில்….
இந்த பிராந்தியத்தில் இயங்கி வரும் தலீபான், சர்வதேச ஐ.எஸ். அல்கொய்தா, கிழக்கு துர்க்கிஷ்தான் ஐ.எஸ். இயக்கம், உஸ்பெகிஸ்தான் ஐ.எஸ். இயக்கம், ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ் இ-முகமது, தெஹ்ரிக் ஐ தலீபான் (பாகிஸ்தான்) ஹிஸ்ப் உத்-தாஹ்ரிர் ஆகிய குழுக்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நிலை மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
இதுபோன்ற பயங்கரவாத குழுக்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தே ஆகவேண்டும். அனைத்து விதமான பயங்கரவாத செயல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். பயங்கரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் கண்டனத்துக்கு உரியவர்கள். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, அதற்கான அமைப்புகளை உருவாக்குவது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் உலக சமூகத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால் பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதில் பிரிக்ஸ் நாடுகள் முன்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அதை பொறுப்புடன் தடுக்கவும் வேண்டும். இதில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவேண்டும். நாடுகளின் இறையாண்மை மற்றும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிடாமல் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம். மற்ற நாடுகளும் பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதி ஏற்கும்படி வேண்டும். – என்று கூறப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு கோவா நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கூட பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத குழுக்கள் குறித்த பிரச்சினையை இந்தியா எழுப்ப சீனா அனுமதிக்கவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடி, ஜின்பிங், புதின் ஆகியோருக்கு அடுத்து 3-வது தலைவராக மாநாடு நடக்கும் இடத்துக்கு சென்றார். அப்போது ஜின்பிங் அவரை கைகுலுக்கி உற்சாகத்துடன் வரவேற்றார். மாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையில் சர்வதேச பயங்கரவாதம், சட்டவிரோத பணபரிமாற்றம், உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை தடை செய்வது, சர்வதேச அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது ஆகியவை பற்றி குறிப்பிட்டார். 9-வது பிரிக்ஸ் மாநாட்டை சிறந்த முறையில் அமைத்ததற்காக சீன அதிபர் ஜின்பிங்கிற்கு மோடி வாழ்த்தும் தெரிவித்தார்.



