மொஹரம் பண்டிகை அன்று துர்கா சிலைகளை கரைக்கக்கூடாது என்ற மம்தா பானர்ஜியின் உத்தரவை ரத்து செய்தது கல்கத்தா உயர்நீதிமன்றம். மேலும், மதசார்பின்மை என்றால் என்ன? என்று மம்தாவுக்கு பாடம் நடத்தியது கோல்கத்தா உயர்நீதிமன்றம். ஒரு மதத்தவரை திருப்தி செய்ய இன்னொரு மதத்தவரின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது என மம்தாவிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா சிலைகள் கரைக்கும் நிகழ்வு செப். 30ஆம் தேதி விஜயதசமி அன்று நடக்கிறது. மறு நாள் அக்டோபர் 1ஆம் தேதி மொஹரம் பண்டிகை வருவதால், செப்.30ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு துர்கை சிலைகளை கரைக்கக் கூடாது என முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த பூஜையின் இறுதி நாளில் சிலைக் கரைப்பு தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து 3 விதமான வெவ்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று இவ்வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் திவாரி, சிலைக் கரைப்பு தொடர்பாக மம்தா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். “ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என்று கற்பனை செய்து கொண்டு நீங்களாக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. இரு மதங்களின் ஊர்வலத்தின் போது அமைதியைப் பேணிக் காக்க வேண்டியது போலீசாரின் கடமை. சிலைகளை அதிகாலை 1.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் கரைக்கலாம்” எனக் கூறினார்.
மக்களின் மத நம்பிக்கையில் குறுக்கிடக்கூடாது என்றும், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆளும் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப் படுகிறது.



