புது தில்லி:
ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக நம் நாட்டில் குடியேறியவர்கள், அவர்கள் அகதிகள் அல்லர்; அவர்கள் இந்தியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ மியான்மர் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தபோது சிலர் ஏன் ரோஹிங்யாக்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்த்தனர். ரோஹிங்யாக்கள் அகதிகள் அல்லர். அவர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி இங்கு வரவில்லை. எந்த ரோஹிங்யாவும் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் சட்ட விரோதமாக இங்கே குடியேறியவர்கள். ரோஹிங்யாக்களை அகற்றுவதன் மூலம் எந்த சர்வதேச சட்டத்தையும் இந்தியா மீறாது” எனக் கூறினார்.
அண்மையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ரோஹிங்யாக்களை நாடு கடத்துவது என மத்திய அரசு அறிவித்தது . இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்தது.



