தீபாவளிக்கு மறுநாள் ஹைதராபாதில் உள்ள கைரதாபாதில் ஒவ்வொரு ஆண்டும் ‘சதர்’ பண்டிகை எனப்படும் எருது ஊர்வலங்களை நடத்தி வருகிறார்கள். இது யாதவ குலத்தின் பூர்வீகர்களின் வழிவழியாக வரும் சம்பிரதாயம்.
இந்த எருதுகனின் சிறப்பு என்ன? ‘சாம்பியன் புல்’ ரகத்தைச் சேர்ந்த எருதுகளை அதிகம் இந்த உற்சவத்தில் காணலாம். எருதுகளுக்கு பெயர்களும் ‘ராணா’ போன்ற வரலாற்று நாயகர்களின் பெயர்களாக இருப்பது சிறப்பு.
இவை ஹரியானா மாநிலத்தில் இருந்து பெரும்பாலும் வரவழைக்கப்படுகிறது. தினமும் இந்த எருதுகள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து கிலோ ஆப்பிள், கேரட், பச்சைப் புல், காலையில் 10 லிட்டர் பால், மாலையில் 10 லிட்டர் பால், சோளம், மாட்டுத்தீவனம், கொண்டைக் கடலை, வெல்லம் போன்றவற்றை உணவாக இடுகிறார்கள். வாரத்திற்கு ஒருமுறை நெய் உண்ணக் கொடுக்கிறார்கள். தினமும் 2 கிலோ மீட்டர் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடக்கும் உற்சவங்களுக்கு ‘ராணா’ என்ற ஹரியானா பிரீட் சாம்பியன் புல் எருதுராஜா பார்வையாளர்களை அதிகம் கவர்கிறது.
இதுவரையில் யாதவ சகோதரர்கள் சதுர் பண்டிகைக்காக மட்டுமே ஹரியானாவில் இருந்து எருதுகளைக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. தற்போது உற்சவங்களுக்காக மட்டுமின்றி விவசாய முன்னேற்றத்திற்கும் உயர் ரக எருமைகளையும் உற்பத்தி செய்வதற்கும் இது போன்ற உயர்ரக எருதுகளை வாங்கி வளர்த்து வருகிறார்கள். சொந்த மகனைப் போல் அன்போடு வளர்த்து பெருமையாக பண்டிகையின்போது ஊர்வலத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக தகுந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து உற்சவத்தை நடத்துகிறார்கள்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62