Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் (தமிழ்க் கவிதை நடையில்)

ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் (தமிழ்க் கவிதை நடையில்)

tiruchendur-murugan
tiruchendur-murugan

இன்று குருப் பெயர்ச்சி (15.11.2020). அத்துடன் கந்த சஷ்டித் திருவிழா ஆரம்ப தினம். முருகப் பெருமான் சூரபத்மனை வதைத்த (அழிக்கவில்லை, மாறாக நல்வழிப்படுத்தி சேவலும் மயிலுமாக மாற்றி தன் கொடியாகவும், வாகனமாகவும் ஏற்று அருளினார்) சூரசம்ஹாரத் திருவிளையாடல் நடந்த தலம் திருச்செந்தூர்.

செந்திலம்பதியின் அத்தலம் குரு ஸ்தலமாகவும் போற்றப் படுகிறது. அத்திருத்தலத்தில் ஜகத்குரு வேதாந்த கேஸரி அத்வைத பரமாசார்யர் ஷண்மத ஸ்தாபகர் ஹிந்து தர்ம புனருத்தாரண அவதார புருஷர் பகவான் சங்கரரின் அம்சமுமாகிய ஸ்ரீ ஆதி சங்கரர், ஆதி குருவின் மைந்தனாகிய ஞான குருவாம் சுப்ரமண்யரைத் துதித்து இயற்றிய ஸ்தோத்திரம் சுப்ரமண்ய புஜங்கம். நன்னாளாம் இன்று, அந்த ஸ்தோத்திரத்தின் எனது தமிழ் மொழிபெயர்ப்பாகிய ஆறுமுக அரவம் என்ற கவிதை மலரை இங்கே (மறு) பதிப்பு செய்கின்றேன்.

tiruchendur-murugan1
tiruchendur-murugan1

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய
ஆறுமுக அரவம்
(சுப்ரமண்ய புஜங்கம்)

தமிழில் : பத்மன்

பால முகத்தேனும் வினைமலை பொடிக்கும்
வேழ முகத்தேனும் சிங்கங்கள் துதிக்கும்
இந்திரன் முதலோர் போற்றும் கணநாதா
புந்தியில் வைத்தேன் மங்களம் அருள்வாய். 1

ஓதலும் அறியேன் பொருளும் அறியேன்
பாடலும் அறியேன் உரைகளும் அறியேன்
அகத்தினில் ஓரொளி அறுமுகத்தே உதிக்க
வாக்கினில் சுரந்தது பாக்களின் அருவி. 2

மயிலேறும் மன்னன் மகாதத்வ வண்ணன்
மயக்கும் உடலோன் மகான்களின் உயிரோன்
அந்தணர் அரும்புகழ் அருமறை திருப்பொருள்
ஆண்டவன் புதல்வ அகிலத்து முதல்வ. 3

என்னுடை சந்நிதி வந்தவர் எவரும்
தன்னுடை பவக்கடல் கடந்தவ ராவர்
என்றே சொல்லி செந்தூர் கரையில்
நன்றே நிற்கும் சக்தியின் மைந்த. 4

அலைகள் விழுந்து அழிவது போலாம்
தலைகள் வணங்கின் பாவம் ஒழியும்
கடலைச் சுட்டும் குகையின் கனலென்
இதயத் தாமரை இருத்தி வாழிய. 5

கந்தன் ஏறிய கந்தமா மலையில்
வந்து ஏறியே வணங்கும் பக்தன்
கைலாஸ மேறிய புண்யம் பெறுவான்
கனியாய் கூறிய அறுமுகன் வாழிய. 6

பெருங்கடல் கரையில் பெரும்பவம் அழிக்கும்
பெருமுனி நோற்கும் பெருமண மலையில்
குகையுள் வசிக்கும் தன்னொளி வசந்தன்
குறைகள் நசிக்கும் குகனே போற்றி. 7

பொன்வீடு வசித்து முறையீடு தீர்த்து
மணவீசு மலர்நிறை மாணிக்க மஞ்சத்து
ஆயிரம் ஞாயிற்று அருளொளி வீசும்
அறுவர் வளர்த்த அமரேச போற்றி. 8

அன்னம் சூழ்ந்து செந்நிறம் பூண்டு
அகத்தை அள்ளும் அடிமலர் அழக
வாழ்கடல் வாதனை என்மன வண்டு
சூழ்ந்துநின் மலரடி மொய்ப்பதில் மகிழ்க. 9

பொன்னால் புனைந்த ஆடைகள் தரித்து
கிங்கிங் கிணிகிணி சலங்கை இசைக்க
உண்மை வாய்ந்த ஞானியர் போற்றும்
திண்மை இடையோன் கந்தா வாழிய. 10

வேடுவர் பெண்ணை சேர்த்து அணைத்து
மடுவில் பூசிய சாந்து சுமந்த
செம்மார் வேலா தாரகன் காலா
அன்பர் ஆசை தீர்க்கும் நேசா. 11

துதிக்கா பிரும்மனை சிறையில் அடைத்தாய்
துதிக்கை விலங்கின் திமிரை துடைத்தாய்
மதிக்கா பதுமன் அரக்கர் புடைத்தாய்
மதித்தே துதித்தேன் பதினிரு புயத்தாய். 12

கறைநறு திலகக் கதிரறு முகத்து
குறையொரு நிலவு ஒப்பில எண்ணில்
கறையறு முகத்து உவமை கூறிட
அறுமதி இலவே குறைமதி உளதே. 13

நின்முக முறுவல் மலருறு அன்னம்
நின்கடைப் பார்வை மலர்மொய் வண்டு
நின்இதழ் உமிழ்நீர் மலர்பொழி அமுதம்
நின்அறு முகமும் தாமரை மலரே. 14

விரிந்து அகன்று செவிவரை நீண்டு
சுரக்கும் கருணை பன்னிரு கண்ணா
அதனுள் ஒருகண் கடைநோக்குப் பார்வை
என்மீது படர குறையென நினக்கு? 15

`அங்கம் உதித்த அருமைப் புதல்வ’
பெங்கும் உவகையில் அரனார் அணைத்து
உலகின் முதல்வன் உச்சி முகர்ந்த
உன்னறு சென்னிக்கு என்னுடை வணக்கம். 16

மார்பில் ரத்தின மாலை ஒளிரும்
காதணி அசைவால் கன்னமும் ஒளிரும்
மஞ்சள் உடுத்தி மயக்கும் வேலொடு
என்புறத்தில் என்றும் சிவக்குமரன் தங்குக. 17

சக்தியின் மடியினில் அமர்ந்திடு போதினில்
சங்கரர் அன்புடன் கரத்தை நீட்டிட
தாவியே பாய்ந்து தழுவி மகிழும்
குழந்தைக் கடவுள் குமரா போற்றி. 18

குமரா மைந்தா குகனே கந்தா
தலைவா வேலா மயில் வாகனனே
புலிந்தன் மருகா துயர் துடைப்போனே
தாரகன் காலா காப்பாய் என்னை. 19

பொறிகள் தளர்ந்து உணர்வும் அகன்று
பீழை பொழிந்து பயத்தால் நடுங்கி
புறப்படு நிலையில் சடுதியில் தோன்றி
குகனே தயாளா காப்பாய் என்னை. 20

காலன் தூதுவர் கடந்தெனை அதட்டி
கட்டியும் வெட்டியும் துயர்தரு வேளையில்
கருணை மயிலில் விரைந்தே வந்து
கரத்தில் வேலொடு காப்பாய் என்னை. 21

உன்னடி கிடந்து உன்னைத் துதித்து
உன்னால் மகிழும் அடியேன் நானும்
அந்திமக் காலம் அசைவற்ற வேளை
அலட்சிய மின்றிக் காப்பாய் என்னை. 22

அண்டம் ஆயிரம் ஆண்ட சூரனும்
தாரகன் வக்தரன் சிங்கனும் கொன்றாய்
வான்மன மேகமோகம் வதைப்பாய் இல்லை
செய்வதும் என்ன? செல்வதும் எங்கு? 23

அடியேன் என்றும் துக்கச் சுமையோன்
அன்பர் காக்கும் உனையன்றி நாடேன்
துன்பம் கொடுக்கும் உன்னன்பு கெடுக்கும்
மனநோய் களைவாய் சக்தியின் மைந்தா. 24

குஷ்டம் க்ஷயம் வலிப்பு ஜுரம்
கடுப்பு பைத்யம் பலவித நோய்களும்
பைசாச கணங்களும் பயந்தோ டும்மே
பன்னீர் இலையில் உன்னீறு பார்த்திட. 25

கந்தனைக் கண்டு கந்தனைக் கேட்டு
கந்தன் புகழை நாவால் ஓதி
கந்தன் திருவடி கரத்தால் துதித்து
எந்தன் அங்கம் உனக்காய் இருக்க. 26

முனிவர் தேவர் பக்தர் விருப்பமே
முடிக்கும் தெய்வம் எல்லா விடத்தும்
கடையனைக் கூடக்கடைத் தேற்றும் தெய்வம்
கந்தனை யன்றி அறியேன் அறியேன். 27

மனைவி மக்கள் சுற்றமும் நட்பும்
மற்ற ஆணும் பெண்ணும் அனைவரும்
உன்னைப் போற்றிட வணங்கிட துதித்திட
நினைப்பவர் ஆகிட அருள்வாய் குமரா. 28

கெடுசெய் மிருகம் புள்ளினம் மற்றும்
கொடுமை நோய்கள் புன்மைகள் வந்தால்
கைவேல் கொண்டு உடனே துரத்திடு
கிரௌஞ்சம் துளைத்த கூர்வடி வேலா. 29

தாயும் தந்தையும் தன்சேய் பொறுப்பர்
நீயும் அதுகொள் தேவசேனைத் தலைவா
நானொரு குழந்தை நீயுலகின் தகப்பன்
என்பிழை பொறுத்து அருள்வாய் ஈசா. 30

மயிலும் போற்றி வேலும் போற்றி
கடாவும் போற்றி சேவலும் போற்றி
கடலும் போற்றி செந்தூர் போற்றி
மீண்டும் போற்றி கந்தப் பெருமானே. 31

ஆனந்தன் வாழ்க அருளோன் வாழ்க
புகழோன் வாழ்க வடிவோன் வாழ்க
கடலோன் வாழ்க உறவோன் வாழ்க
முக்திதரு முதல்வன் மைந்தா வாழ்க. 32

புஜங்கம் என்னும் தோத்திரம் இதனை
பக்தியால் படித்தோன் பயனாய் பெறுவான்
நல்மனைவி மக்கள் பொருளும் வாழ்வும்
முருகன் அருளால் முக்தியும் முடிவில். 33

சிவமயம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,158FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,492FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

2 COMMENTS

  1. வடமொழியில் நான் தினந்தோறும் சொல்லி வந்த ஸ்லோகம். திருமதி ஹா.கி. வாலம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்ததாக ஒரு நினைவு. இது பத்மன் என்பவரின் படைப்பு எனப் போட்டிருக்கிறீர்கள். அந்தப் பாம்பு நடை நன்றாக வருகிறது. “முருகாய நமோ நம:” – முனைவர் கு.வை.பா

    • ஹா.கி.வாலம் அம்மையார் குறித்து என் தந்தையார் ஸ்ரீதரம் குருஸ்வாமி அய்யர் புகழ்ந்து சொல்வார். நிறைய தமிழ்ப்பாக்களை இயற்றியுள்ளார். ஒரு தொகுப்பு இருந்த து. ஊர் ஊராக இடம் பெயர்ந் ததில் கண்களில் படாமல் போய்விட்டது. அவரின் படைப்புகள் பார்க்க கிடைக்குமா? நகல் இருந்தால் கூட போதும். பாம்பின் ஊர்தல் குறித்து கூட எங்கள் தந்தையார் குறிப்பிட்டுள்ளார். அம்மையார் இளமையிலேயே முக்திபெற்றார். அவரது வரழ்க்கை வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும். அவரின் படைப்புகள், வரலாறு உள்ளவர்கள் இருப்பவர்கள் நகல் ஒன்றை தர வேண்டுகிறேன்.

      இவண் , ஸ்ரீதர குரு சிவகுமார், 9566222468

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

Latest News : Read Now...