
பைனான்சியல் ஆப் என்ற பெயரில், மொபைல் ‘ஆப்’கள் மூலமாக குறுகிய கால கடன் வழங்கும் செயலிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், செயலி மூலமாக சில நிறுவனங்கள், அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது. கடனை வசூலிக்க, பைனான்சியல் செயலிகள் மோசமாக நடந்து கொள்வதும், கடன்பெற்றவர்களின் மொபைல் போனில் உள்ள தகவல்களை திருடி, தரம் தாழ்ந்து செயல்படுவது குறித்தும் புகார்கள் மற்றும் தகவல்கள் வந்துள்ளன.
அதிக வட்டி, மறைமுக கட்டணத்துடன் கடன் வழங்கும் செயலிகள் குறித்து, அவற்றின் மோசமான நடைமுறைகள் குறித்து, காவல்துறையிலோ, அல்லது சைபர் கிரைம் பிரிவிலோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
https://sachet.rbi.org.in என்ற இணையதளம் வாயிலாக, ஆன்லைன் மூலமும் புகார் அளிக்கலாம்!
கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் எவை, எவை என்பது தொடர்பான தகவல்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளது… என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாகக் கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம்.