புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி விடுவிப்பு! தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு!

இந்தியா
puduchery-governor-issue
puduchery-governor-issue

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப் பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அறிவிப்பில், கிரண் பேடிக்கு பதிலாக, தமிழிசை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் அமைச்சர்களும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தெலங்காணா மாநில ஆளுநராக உள்ள டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளதற்கு, மாநில முதல்வர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து, மூத்த அமைச்சராக பதவி வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தீப்பாய்ந்தான் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோர் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டது.

ஏற்கெனவே முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததும், ஆளுநரை மாற்ற வேண்டும் என்று சில தினங்களுக்கு முன் தில்லி சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து நாராயணசாமி வலியுறுத்தியதும் பரபரப்பாகப் பேசப்பட்டன.

அடுத்து சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.