
குஜராத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பேராசிரியர் ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வரவில்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
இதனால் அலைக்கழிக்கப்பட்ட பேராசிரியர் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
குஜராத்தில் உள்ள மத்திய பல்கலையில் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸ் துறையின் பேராசிரியராக பணிபுரிபவர் இந்திராணி பானர்ஜி. இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.,2) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால், அவரது மாணவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரது ஆக்ஸிஜன் செறிவு நிலை 90 முதல் 92 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் சிவில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி இருந்ததால், அவரை வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனால், அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு போதிய ஆக்ஸிஜன் வசதியும், வென்டிலேட்டர் அளவும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். அதற்குள்ளாக இந்திராணிக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே, ஏப்.,3ம் தேதி மாணவர்கள் தங்கள் தனியார் வாகனத்தில் இந்திராணியை ஏற்றி, ஆமதாபாத்தில் உள்ள மாநகராட்சி கொரோனா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், ஈ.எம்.ஆர்.ஐ., மற்றும் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்படாததால், மருத்துவமனையில் அவரை அனுமதிக்க மறுத்தனர்.நிலைமை மோசமடையவே, மீண்டும் காந்திநகர் மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர்.
அந்த நேரத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. அதிகாலை 2 மணியளவில் அவருக்கு ஆக்ஸிஜன் இயந்திரத்தை மருத்துவமனை பொருத்தியது. ஆனால், இவ்வளவு அலைக்கழிப்பினாலும், தாமதமான சிகிச்சையினாலும், இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்வளவு முயன்றும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையின் அலட்சியம் போன்ற பல காரணங்களால் இந்திராணி பானர்ஜி உயிரிழந்தது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.