
2021 ஜூன் 1 முதல் தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தரத்தை கட்டாயமாக செயல்படுத்த முழுமையாக தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்திற்கான ஹால்மார்க் என்பது விலைமதிப்பற்ற அந்த உலோகத்தின் தூய்மை சான்றிதழ் மற்றும் இது தற்போது விருப்பத்தின் அடிப்படையில் உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு, 2019 நவம்பரில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், 2021 ஜனவரி 15 முதல் நாடு முழுவதும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஹால்மார்க்கிங்கிற்கு மாறுவதற்கும், தங்களை இந்திய தர நிர்ணய பணியகத்தில் (பிஐஎஸ்) பதிவு செய்வதற்கும் அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக நகைக் கடைக்காரர்களுக்கு காலக்கெடு வழங்கியிருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து நகைக்கடைக்காரர்கள் செயல்படுத்த அதிக நேரம் கோரியதையடுத்து, காலக்கெடு ஜூன் 1 வரை நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது நீட்டிப்பை மேலும் அதிகரிக்க எந்த விண்ணப்பமும் கோரப்படவில்லை. பிஐஎஸ் ஏற்கனவே முழுமையாக ஹால்மார்க்கிங் செய்த நகைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.” என்று நுகர்வோர் விவகார செயலாளர் லீனா நந்தன் ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் பிஐஎஸ் இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி, “ஜூன் முதல், நாங்கள் கட்டாய ஹால்மார்க்கிங் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தயாராக இருக்கிறோம். தற்போது, தேதியை நீட்டிக்க எங்களுக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை.” என்றார்.
“இதுவரை, 34,647 நகைக்கடை விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களில், சுமார் 1 லட்சம் நகைக்கடை விற்பனையாளர்களை பதிவு செய்வோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று அவர் கூறினார். பதிவு செயல்முறை ஆன்லைனில் மற்றும் தானியங்கி முறையில் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல், நகைக்கடை விற்பனையாளர்கள் 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுவார்கள்.
பிஐஎஸ் ஏற்கனவே ஏப்ரல் 2000 முதல் தங்க நகைகளுக்கான ஹால்மார்க்கிங் திட்டத்தை நடத்தி வருகிறது. தற்போது சுமார் 40 சதவீத தங்க நகைகள் இந்த தரத்துடன் அடையாளப் படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் வரும் ஜூன் முதல் இதை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.