சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக கருதி இடுகாட்டில் தகனம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பெண் கடைசி நிமிடத்தில் உயிருடன் விழித்த நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 72 வயதான பெண்ணான லக்ஷ்மி பாய் உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்தார். பீம் ராவ் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணி புரியும் அவரது பேத்தி நிதி ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
மருத்துவமனைக்கு வந்த அவருக்கு அனைத்து பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிய வந்தது. அவருக்கு இசிஜி சோதனை செய்த பின்பு லக்ஷ்மி பாய் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
இதனையடுத்து லக்ஷ்மி பாயை தகனம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து கோகுல் நகர் இடுகாடுக்கு கொண்டு சென்றனர். ஆனால் லக்ஷ்மி பாய் உடல் குளிர்ந்து போகவில்லை. இதனால் அவரது பேத்தி சந்தேகமடைந்து அவரது பல்ஸை சோதனையிட்டார் அப்போது ஆக்சிஜன் அளவு 85 இருந்தது தெரிய வந்தது. இதனால் லக்ஷ்மி பாய் இன்னும் உயிருடன் இருக்கிறார் என அறிந்து தகன மையத்திற்கு செல்லாமல் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் லக்ஷ்மி பாய் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருக்கும் இசிஜி கருவி சரியாக வேலை செய்யவில்லை என நிதி குற்றஞ்சாட்டினார்.
ஆனால் மருத்துவமனை அதிகாரிகளோ “நிதி ஒரு மருத்துவ உதவியாளர். அவரும் தனது பாட்டி இறந்துவிட்டார் என உறுதிப்படுத்திய பின்புதான் தகனத்துக்கு கொண்டு சென்றனர்” என கூறியுள்ளனர்