மனதின் குரல், 78ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்: 27.06.2021
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி…
எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் கொரோனாவின் கடினங்களையும், முன்னெச்சரிக்கைகளையும் பற்றிப் பேசினோம், நாடு மற்றும் நாட்டுமக்களின் பல சாதனைகள் குறித்தும் அளவளாவினோம்.
இப்போது மேலும் ஒரு சந்தர்ப்பம் நம்முன்னே காணக் கிடைக்கிறது. ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரவிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் என்ற அம்ருத மஹோத்சவம் என்ற அமுத விழா, நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது. நாம் தேசத்திற்காக வாழப் பழக வேண்டும். விடுதலைப் போர் – தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் சரிதம்.
நாடு விடுதலை பெற்ற பிறகான இந்த வேளையை நாம் தேசத்திற்காக வாழ்வோரின் கதையாக மாற்ற வேண்டும். India First, இந்தியாவுக்கே முதலிடம் என்பதே நமது மந்திரமாக இருக்க வேண்டும். நமது ஒவ்வொரு தீர்மானம், ஒவ்வொரு முடிவின் ஆதாரமும், India First, இந்தியாவுக்கே முதலிடம் என்பதாக அமைய வேண்டும்.
நண்பர்களே, அமுத விழாவில் தேசத்தின் பல சமூக இலக்குகளும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாம் நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவில் கொள்ளும் வகையில், அவர்களின் வரலாற்றுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தின் வரலாறு குறித்துக் கட்டுரைகள், ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று இளைஞர்களிடத்தில் நான் மனதின் குரல் வாயிலாகக் கேட்டிருந்தேன்.
இளைய சமூகத்தின் திறமைகள் வெளிப்பட வேண்டும், இளையோரின் எண்ணங்கள், அவர்களின் சிந்தனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், இளைஞர்களின் எழுதுகோல்களுக்குப் புதிய சக்தி கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இந்தப் பணியில் ஈடுபட, மிகவும் குறைந்த காலத்தில் 2,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்வந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
நண்பர்களே, சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த போராட்டம் குறித்த பேச்சுக்கள் பொதுவாக நடந்து வந்திருக்கின்றன; ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பிறந்த என் இளைய நண்பர்கள், 19ஆம்-20ஆம் நூற்றாண்டுகளில் நடந்த சுதந்திரப் போராட்டம் குறித்து, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியை மேற்கொண்டிருப்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்கள் அனைவரும் MyGov தளத்தில் இதனைப் பற்றிய முழு விவரங்களையும் அளித்திருக்கின்றார்கள்.
இவர்கள், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடம், பாங்க்லா, தெலுகு, மராட்டி, மலையாளம், குஜராத்தி என தேசத்தின் பல்வேறு மொழிகளில், விடுதலைப் போராட்டம் பற்றி எழுதி வருகிறார்கள். சிலர் விடுதலை வேள்வியோடு இணைந்த விஷயங்களை எழுதுகிறார்கள், சிலர் தங்களுக்கு அருகிலே இருக்கும் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற இடங்களைப் பற்றித் தகவல்கள் அளிக்கிறார்கள், சிலர் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார்கள்.
இது ஒரு நல்ல தொடக்கம். அமுத விழாவோடு நீங்கள் எந்த வகையில் இணைந்து கொள்ள முடிந்தாலும், அவசியம் இணைந்து கொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன்.
நாடு விடுதலை அடைந்த 75 ஆண்டுகள் என்ற தருணத்தின் சாட்சிகளாக நாம் இருப்பது நமது பெரும்பேறாகும். ஆகையால் அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திக்கும் வேளையில், அமுத விழாவின் மேலும் பல தயாரிப்புகள் பற்றியும் பேசுவோம்.
நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், கொரோனா தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வாருங்கள், உங்களுடைய புதிய முயற்சிகள் வாயிலாக, தேசத்திற்கு புதிய வேகத்தை அளித்து வாருங்கள், என்ற இந்த நல்விருப்பங்களோடு, மீண்டும் சந்திப்போம், பலப்பல நன்றிகள்.