ஐ.பி.எல் 2021 – 07.10.2021
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வியாழக்கிழமை அன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் துபாயில் சென்னை அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் சென்னை அணியை மட்டையாடச் சொன்னது.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். டியூ பிளேசிஸ் (72 ரன்) தவிர மீதமுள்ள சென்னை அணி வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.
இருபது ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து விளையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அதன் தலைவருமான கே.எல். ராகுல் 42 பந்துகளில் 98 ரன் எடுத்து தனது அணியை 13 ஓவரில் நான்கு விக்கட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுக்கவைத்து ஒரு பிரமாதமான வெற்றியைப் பெறவைத்தார்.
இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடந்தது. பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் கொல்கொத்தா அணியை ஆடச்சொன்னது.
கொல்கொத்தா அணியின் எல்லா பேட்ஸ்மென்களும் தங்களது பொறுப்புணர்ந்து ஆடினர். சுப்மன் கில் (56), வெங்கடேஷ் ஐயர் (38) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் குறைவான ரன் எடுத்தாலும் ரன் ரேட்டை அதிகப்படுத்தினர்.
இறுதியில் கொல்கொத்தா அணி இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 171 ரன் கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி முதல் 6 ஓவருக்குள் நாலு விக்கட் இழந்தது. ராகுல் திவாத்தியா (44) ஷிவம் துபே (18) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தனர். அந்த அணி 16.1 ஓவரில் 85 ரன் மட்டுமே எடுத்து தொல்வியடைந்தது.
பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் இனி அடுத்த சுற்றுக்கு போக இயலாது, நாளை மும்பைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அனிக்கும் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி 171 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வெல்ல வேண்டும்.
இதுவும் நடக்கவியலாத காரியம். எனவே அரையிறுதியில் ஆடப்போகும் அணிகள் டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கொத்தா அணிகள் என்றே நாம் முடிவுசெய்யலாம். இருப்பினும் நாளை நடக்கவிருக்கும் ஆட்டத்தையும் பார்க்க வேண்டும்.