December 9, 2024, 4:28 PM
30.5 C
Chennai

திருப்புகழ் கதைகள்: திருமருகல்!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 167
உயிர்க்கூடு விடும் – பழநி | திருமருகல்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

அருணகிரியார் அடுத்ததாக திருமருகல் என்ற சிவத்தலத்தை இத்திருப்புகழில் குறிப்பிடுகிறார். இத்தலத்தில் இறைவர் திருப்பெயர் மாணிக்கவண்ணர் ஆகும். வடமொழியில் இரத்தினகிரீஸ்வரர். இறைவியார் திருப்பெயர் வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி ஆகியன. தல மரம் வாழை. இங்கேயுள்ள தீர்த்தம் மாணிக்க தீர்த்தம் எனப்படுகிறது.

இத்தலம், தமிழ் நாட்டில், நன்னிலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் நாகூர் செல்லும் சாலை வழியில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம்.

திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.

தல வரலாறு

இது பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை, ஞானசம்பந்தர் ‘சடையாய் எனுமால்’ பதிகம் பாடி எழுப்பியருளிய தலமாகும். இத் தல இறைவனின் அருளால், தடைபட்ட திருமணங்கள் கைகூடும். கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் “திருமருகல்” என்று பெயர் பெற்றது.

பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தடி நடக்காமல்,அவனுடைய பெணகளுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான்.

ALSO READ:  நூற்றாண்டில்... ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் விஜயதசமி விழா பேருரை!

அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தாள். திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர்.

thirumarugal
thirumarugal

அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். திருமணம் ஆகாததால் வனிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய், இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள்.

சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வணிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார்.

திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள்.

thirumarugal2
thirumarugal2

சம்பந்தப் பெருமான் திருமருகலில் வணிகன் விடம் தீர்த்து அத்தலத்தில் தங்கியிருந்த போது, சிறுத்தொண்டர் வந்து திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சம்பந்தரும் அடியார்களுடன் திருமருகல் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி சிறுத்தொண்டருடன் திருசெங்காட்டங்குடி செல்ல ஆயத்தமானார்.

ALSO READ:  உசிலம்பட்டி, தாராப்பட்டி பகுதி கோயில்களில் கும்பாபிஷேகம்!

திருமருகல் இறைவன் ஆளுடைய பிள்ளையாருக்கு திருமருகல் கோவிலிலேயே திருசெங்காட்டங்குடி கணபதீச்சரத்து இறைவனைக் காட்டி அருள் புரிந்தார். சம்பந்தரும் அங்கமும் வேதமும் ஓதும் நாவர் என்று தொடங்கும் (திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான) பதிகம் பாடினார்.

இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. எதிரில் திருக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. கரையில் முத்து விநாயகர் சந்நிதி. வாயில் கடந்து உட்சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இம்மரத்தினடியில்தான் ஞானசம்பந்தர், விஷந்தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. படிகளேறி முன் மண்டபத்தையைடந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தலப்பதிகக் கல்வெட்டு இடப்பாலுள்ளது. சனி பகாவன் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்றால் நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கத்தில் மாணிக்கவண்ணர் சந்நிதி உள்ளது. இருபுறமும் விநாயகரும், செட்டிப் பிள்ளையும், பெண்ணும் உள்ளனர்.

thirumarugal temple
thirumarugal temple

மூலவர் – சிவலிங்கத் திருமேனி – சுயம்பு மூர்த்தி எனப்படுகிறது. கிழக்கு நோக்கியது. எடுப்பான தோற்றம் – சதுர ஆவுடையார். ‘மடையார் குவளை மலரும் மருகல் உடைய’ பெருமானை மனமாரத் தொழுதபாடி வணங்குகிறோம். உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள், பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராஜ சபையின் வாயிலில் பதஞ்சலி, வியாக்ரபாதர் உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதியும், பைரவர் சூரியன் திருவுருவங்களும், ஒரேபீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களம், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும் அடுத்தடுத்துள்ளன.

ALSO READ:  இனி தட்கலில் டிக்கெட் போட வேண்டாம்! ரயில்வே முன்பதிவில் மிகப் பெரிய மாற்றம்!

வெளிச்சுற்றில் சப்தமாதாக்கள், விநாயகர், சௌந்தரநாயகி, மருகலுடையார் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகக் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர்.

அம்பாள் சந்நிதியில் குசகேது மன்னன் வரலாறும், ஞானசம்பந்தர் விடந்தீர்த்த வரலாறும் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. நாடொறும் ஐந்து கால பூஜைகள். நடைபெறுகின்றன. சித்திரையில் பெருவிழா, இவ்விழாவில் ஆறாம் நாள் திருவிழா விடந்தீர்த்த ஐதீகமாகவும், ஏழாம் நாள் விழா செட்டிமகன், செட்டிப் பெண் திரக்கல்யாணமகாவும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ள தெற்கு வீதியின் கோடியில் விடந்தீர்த்த விநாயகர் கோயில் உள்ளது. பக்கத்தில் உள்ள மடமே வணிகன், செட்டிப்பெண், படுத்துறங்கிய இடம். இங்கு விஷம் தீர்ந்ததால் இங்குள்ள பிள்ளையார் ‘விடந்தீர்த்த பிள்ளையார்’ என்ற பெயருடன் விளங்குகிறார். இதனால் இன்றும் அவ்வீதியில் பாம்பைக் காண்பது அரிது என்றும், பாம்பு கடிப்பது இல்லை, கடித்து இறப்பதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. சனீசுவர பகவானுக்கு சுவாமி சந்நிதிக்கு போகும் வாயிற்படியில் வடபுறம் தனி சந்நிதி உள்ளது.

இதுபோல வேறு எந்த தலத்திலும் சனிபகவானை காண முடியாது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழ் வைப்புத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week